'டைட்டானிக் மிஷன்' என்ற பெயரில் டூப் விட்ட அமெரிக்கா!

லண்டன்: டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது இரு கப்பல்களை அமெரிக்கா தேடிய கதை வெளியாகியுள்ளது.

1985ல் இந்த டூப் மிஷனை மேற்கொண்டது அமெரிக்கா. பாப் பல்லார்ட் என்பவர்தான் இந்த மிஷனுக்குத் தலைமை தாங்கினார். சமீபத்தில் இவர் தான் மேற்கொண்ட டைட்டானிக் மிஷனின் பின்னணியை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அப்போது மேற்கொண்ட பயணம் டைட்டானிக் கப்பலைத் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. உண்மையில், கடலில் மூழ்கிப் போய் விட்ட 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ஆய்வுக்காகவே அப்போது நாங்கள் கடல் பயணம் மேற்கொண்டோம்.

இதை வெளியில் சொல்லக் கூடாது என்று அப்போது எனக்கு நெருக்கடி இருந்தது. இதனால்தான் அதைச் சொல்ல முடியவில்லை. இப்போது அந்த நெருக்கடி இல்லை. எனவே உண்மையை சொல்கிறேன்.

தகவல் சேகரிக்க 12 நாள் அவகாசம் மட்டுமே தரப்பட்டது. அதற்குள் மூழ்கி விட்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. அது ஒரு ரகசியப் பயணம்.

தகவல் சேகரிப்பது மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும் என்றார் பல்லார்ட்.

அமெரிக்கா தொலைத்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றின் பெயர் யுஎஸ்ஸ் த்ரெஷர், இன்னொரு கப்பலின் பெயர் யுஎஸ்எஸ் ஸ்கார்பியோன். இரு கப்பல்களிலும் 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இதில் 1963ம் ஆண்டு த்ரஷர் காணாமல் போனது. 68ல் ஸ்கார்பியோன் காணாமல் போனது.

இந்தக் கப்பல்களில் ஒன்றை அப்போதைய சோவியத் யூனியன் படைகள் மூழ்கடித்திருக்கக் கூடும் என்பது அமெரிக்காவின் சந்தேகம்.

இக்கப்பல்களைக் கண்டுபிடிக்கும் பணி பல்லார்டைத் தேடி வந்ததே சுவாரஸ்யமான விஷயம். கடலியல் ஆய்வாளரான பல்லார்ட், தனது ரோபோட் முறையிலான ஆய்வுக் கப்பலைப் பயன்படுத்தி டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யத் தீர்மானித்தார்.

இதற்கான அனுமதியை வாங்க கடற்படை அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அதை அப்புறம் பார்க்கலாம், முதலில் இந்த இரு கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து தகவல் கொண்டு வாருங்கள் என்று கடற்படை கேட்டுக் கொண்டதாம்.

இதையடுத்து அமெரிக்க கடற்படைக்காக, டைட்டானிக் பயணம் என்ற பெயரில், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடும் பயணத்தை மேற்கொண்டது பல்லார்ட் தலைமையிலான குழு.

பல்லார்ட் கடலுக்குள் சென்று காணாமல் போன இரு கப்பல்களின் சிதைவுகளையும் கண்டுபிடித்து அது தொடர்பான தகவல்களை அமெரிக்க கடற்படையிடம் வழங்கினார். இந்த ஆய்வின் முடிவில் ஸ்கார்பியோன் வேறு எந்த நாட்டுப் படையாலும் தாக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. அது அனுப்பிய குண்டு அதன் மீதே விழுந்ததால்தான் அது சேதமடைந்ததாகவும் தெரிய வந்தது.

இந்தப் பயணத்தின்போது கிடைத்த கேப்பில் டைட்டானிக் ஆய்வையும் மேற்கொண்டாராம் பல்லார்ட்.

thatstamil