அசையும் கட்டடம், Dubai skyscraper

முதல் தடவையாக ஒவ்வொரு தளமும் சுயாதீனமாக அசையக்கூடிய கட்டடம் துபாயில் கட்டப்பட உள்ளது. இத்தாலிய நாட்டு கட்டட கலை நிபுணரான டேவிட் பிஸ்ஸர் என்பவரால் வடிவமைக்கப்படும் இந்த கட்டடம் 80 தளங்களை கொண்டதாகும். 420 மீற்றர் உயரத்தில் அமையும் இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 360 பாகை சுழற்சி (முழுச்சுழற்சி) அடைய 1 - 3 மணித்தியாலங்கள் எடுக்கும். அதைவிட 79 காற்றாலை இயந்திரங்களும் ஒவ்வொரு தளத்திலும் இணைக்கப்ப்ட்டிருக்கும்

மூலச்செய்தி, காணொளி..
http://news.bbc.co.uk/2/hi/middle_east/7472722.stm

47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம்.

அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த கருவியின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், இருவரும் தலைகுப்புற கீழே விழுந்தனர். 500 அடி உயரத்திற்கு மேலிருந்து விழுந்ததால் அல்சிடிஸின் சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அல்சிடிஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை, கால்கள் மட்டுமல்லாமல் அவரின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அல்சிடிஸுக்கு 12 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான குருதியும் ஏற்றப்பட்டது. ஆறு மாதங்களாக கோமாவிலிருந்து அல்சிடிஸ் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் அல்சிடிஸுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில்;

பிழைக்கமாட்டார் என்று தான் நினைத்தோம். தீவிரமான சிகிச்சையின் பலனாக பிழைத்துவிட்டார். அதிர்ஷ்டமும் அவருக்கு உதவியுள்ளதெனக் கூறியுள்ளனர்.

காயம் முழுவதும் குணமடைந்துவிட்டது. ஆனால், முன்புபோல் நடக்க முடியவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என அல்சிடிஸ் தெரிவித்துள்ளார்.

thinakural.com

2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும்

2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன் மக்கள் தொகையுடன் 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை கடந்த 1999ம் ஆண்டு 6 பில்லியனை எட்டியது என்றும், இது 13 ஆண்டுகளில் மேலும் ஒரு பில்லியனை எட்டி 2012ல் 7 பில்லியனாக உயரும் என்றும் அது கூறியுள்ளது.

கடந்த 1800ல் மக்கள் தொகை 1 பில்லியனாக இருந்தது என்றும், அது 2 பில்லியனாக உயர 130 ஆண்டுகள் ஆனது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

" கணினி " - ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!


மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

இளவரசி டயானா (Diana)


உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.

அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!

பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.

டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...

லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..

வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.

வெளியே...

பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.

ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!

‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.

‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.

பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...

‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’

என்று கூட்டம் திமிற...

ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..

அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின.

அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.

டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!

எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.

ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!

டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!

டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.

அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.

மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்.

திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.

அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.

குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.

தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.

இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.

மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.

டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.

சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.

டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.

அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.

பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்?


ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி பதிவு செய்கின்றேன்.

மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து.

இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்..

அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓர் இடத்தில் நீ இருக்கத்தான் வேண்டும் என்ற தாயின் குரலுக்கு, எனக்கு இருக்க நேரமில்லை அம்மா என்றவாறே ஒரு கையில் ரொட்டித்துண்டை(Sandwich) ஏந்தியபடி மறு கையால் பந்தை அடித்தபடி வெளியேறி விடுவான்.

ஆம் அவன்தான் றிக் ஹான்சன் போர்ட் அல்பேர்னி (Rick Hansen) , பிரிட்டிஷ் கொலம்பியா, கனடாவில் பிறந்து, வில்லியம்ஸ் லேக்கில் வளர்ந்தவன். ஏப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பான்.

தூண்டில் மூலம் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காகக்கொண்ட றிக் மற்றய நேரங்களில் ஏதாவதொரு வகைப்பந்தை தட்டி அடித்து உறுட்டி எறிந்தபடியே இருப்பான்.
அனைத்து வகையான விளையாட்டிலும் ஈடுபாடு கொண்ட றிக்கின் விருப்பத்துக்குரிய விளையாட்டாக கரப்பந்து (Volleyball) இருந்தது.

தனது 15வது வயதில் (1973), நணபர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற .றிக், திரும்பி வரும் வழியில் ஓர் வாகன விபத்திற்கு உட்பட்டான். தூன் பயணம் செய்த வாகனத்தில் இருந்த தூக்கி எறியப்பட்டு, நினைவு திரும்பியதும் றிக்கால் தனது கால்களை உணர முடியவில்லை. உங்களால் இனி நடக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என மருத்துவர் கூற றிக் சிரிக்கின்றான். ஆவன் ஓர் விளையாட்டு வீரன். எலும்பு முறிவு ஏற்படுவதும் பின்பு சரிப்பண்ணுவதும் விளையாட்டில் சாதாரணம்தானே. அவனைப் பார்வையிட வந்த நண்பர்களின் சோர்ந்த முகங்களைப்பார்த்து, நான் விரைவில் வீடு திரும்பி விடுவேன் என்று உற்சாகமாகப் பதிலளிப்பான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அது ஒன்றும் இலகுவில் சீர் செய்யக்கூடிய பிரச்சினையாக இருக்கவில்லை. இரவு நேரங்களில் றிக்கை அவனின் பெற்றோர்கள் மட்டுமே அறிவர் எப்படியாவது இதை இயங்கப் பண்ணுங்கள் என்று கெஞ்சுவான். ஓர் இடத்தில் இருக்கவே பிடிக்காத மகன் எழுந்து இருக்கப் பிரியப்படுகிறான். ஆனால் எதுவுமே செய்ய முடியாத பெற்றோர்.

றிக்கின் இடுப்புக்கு கீழே அங்கங்கள் செயலிழந்து விட்டன. அவனது முதுகெலும்புத் தண்டு முறிந்து விட்டது Spinal Cord Injury), கால்களில் சக்கரங்கள் கட்டிக்கொண்டது போல் பறந்து திரிந்த றிக்கிற்கு அன்று முதல் சக்கரங்களே கால்களாகின.

நடக்கும் சக்தியை இழந்து விட்டதும் றிக் துவண்டுபோய் அடைபட்டு கிடந்தாரா? இல்லை. அவர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார், தன் சக்கர நாற்காலியில் பாடசாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளராக கடமையாற்றினார்.
சுக்கர நாற்காலியில் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் வென்றார். கனடா சக்கர நாற்காலி கரப்பந்து விளையாட்டில் இவரது அணி முதலிடம் பெற்றது. புpன் இங்கிலாந்து சென்று உலக கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்றார்.

என்னால் ஓராயிரம் விடயங்களை முன்புபோல் செய்ய இயலாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நான் செய்யக்கூடிய பல்லாயிரம் விடயங்கள் இருக்கின்றன என நம்பிக்கையோடு கூறி வருகின்றார்.

ரொரி பொக்ஸ் உம் றிக்கும் நல்ல நண்பர்கள். ஓன்றாக சக்கர நாற்காலியில் கூடைப்பந்து விளையாடியவர்கள். ரொரி பொக்ஸ், கால்கள் இயலாமல் போனபோதும் தன் கனவுகளை நிறைவேற்றிய விதம் அவர் மறைவுக்குப் பின் றிக் மனதில் ஆழப்பதிந்தது. றுpக் தன் கனவுகளைப் பற்றி சிந்திக்கலானார். ஆங்கவீனமானவர்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த விரும்பினார். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்கும் எண்ணினார்.

ஆவரின் கனவு மார்ச் மாதம்21, 1985 அன்று நனவாகியது. ஆம் அன்று தனது சக்கர நாற்காலியில் உலகைச்சுற்றிவர தன் குழுவுடன் புறப்பட்டார். தினமும் இரண்டு மரதன் தூரங்கள் பயணித்தார். கைகள் வலித்தன, காலநிலைகள் குறிக்கிட்டன. ஆனால் அவரின் மன உறுதி அனைத்தையும் வென்று பயணம் முன்னேறியது. 34 நாடுகளினூடாக அவர்களின் பயணம் அமைந்தது. இப்பயணத்தை முடிக்க அவர்களுக்கு 2 வருடங்கள், 2மாதங்கள், 2 நாட்கள் எடுத்தன. 26 மில்லியன் டொலர்களுக்கு மேலாக நிதியும் திரட்டினர். றிக்கின் செய்தி உலகெங்கும் சொல்லப்பட்டது.

தனது பயண முடிவில், அவரது சிகிச்சையாளரும்(Physiot Herapist) அவரது பயணத்தின் முக்கிய உறுப்பினருமாக இருந்த அமன்டா ரைட்(Amanda reid) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தம் மூன்று பெண் பிள்ளைகளுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

அவரது பயணம் முடிந்தாலும் றிக் ஓய்ந்து விடவில்லை. அவரின் கனவுகளும், குறிக்கோள்களும் மென்மேலும் வளர்ந்தன. றிக் ஹைன்சன் அமைப்பகம் ஒன்றை நிறுவி, முள்ளந்தண்டு பாதிப்படைந்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அதனூடாக உழைத்தார்..

முதுகெலும்புத் தண்டு முறிவுக்கு வைத்தியங்களே கிடையாத அந்த நேரத்தில், ரெரி பொக்ஸ் புற்று நோய் ஆராட்சிக்கு எப்படி நிதி திரட்டினாரோ அதேபோல் முதுகெலும்புத் தண்டு முறிவுக்கும் ஆராட்சிக்காக நிதி திரட்டி, இன்று 200 மில்லியன் டொலர்களுக்கு மேல் சேர்த்து, இவ்வாண்டு 2008 நடுப்பகுதியில் வன்கூவரில் ஓர் பிரத்தியேக மருத்துவமனையை திறந்து வைக்கின்றார்.

றிக்கின் சாதனைகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். இன்றும கனடா முழுவதும் இளைஞர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது சாதனைகளில் முக்கியமாக, சொந்தப் படைப்புக்களான "Man In Motion" " Going For The Distance" போன்ற புத்தகங்கள் அதிக பிரதிகளை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது. "Going For The Distance."எனும் சுய முன்னேற்றப் புத்தகத்தில், எவ்வாறு குறிக்கோள்களை அடைவது என்பது பற்றியும், எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும், மனிதனுக்கு எவ்வளவோ கஷ்டங்கள், பிரச்சினைகள் வருகின்றன, ஆனால் அவன் எவ்வாறு அவற்றை கையாள்கின்றான் என்பதைப்பொறுத்தே அவன் வாழ்க்கை அமைகின்றது என்று கூறியுள்ளார். அதை செயல்மூலமும் காண்பித்து வருகின்றார்.

பெப்ரவரி மாதம் 2007இல், கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்ப்பர், றிக் ஹான்சன் அமைப்பகத்திற்கு 30 மில்லியன் டொலர்களை வழங்கி, றிக் ஹைன்சனின் உழைப்பையும் சாதனைகளையும் பாராட்டி ஒரு உண்மையான கனடிய கதாநாயகனாக றிக் ஹைன்சனை வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆம் யாழ்கள உறவுகளே, றிக்கின் கதையை நாம் கதைபோல வாசிப்பதிற்கு மாறாக ஆழமாகச் சிந்தித்து, தனது குறிக்கோளை அமைத்து வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்துள்ளார் என்பதை கவனத்தில்கொண்டு நாமும் எங்களது வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த முயற்சிப்போமாக.

ஜூன் 14 சே குவராவின் 80 வது பிறந்த தினம்
ஜூன் 14 உலக மக்களால் என்று மறக்கபடாத மனித குலப்போராளி சே குவராவின் 80 வது பிறந்த தினமாகும் 1967 ம் ஆண்டில் பொலீவிய இராணுவத்தால் தைது செய்யபட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட இப்போராளியின் உடலம் கூடவெளியே தெரியாதபடி இரகசிய இடத்தில் எரியூட்டபட்டது. உலகின் நினைவிலிருந்து அவரை அகற்ற ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அம்முயற்சி நிறைவேறவில்லை. இன்றும் அவரது நினைவுகளைஉலக மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை. அம்மாவீரனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போராளியின் நினைவுகளை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் செப்ரெம்பர் 2007 ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சேகுவராவின் வாழ்க்கை பதிவுகள் கொண்ட கட்டுரையை இங்கு தருகின்றோம்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.
.“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....


புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.

தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.

உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.

சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.

சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.
"1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம் "


தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவை\யே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.

காலை 10.30

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30..

அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30

காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.

அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசியியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி.

லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.


"கோழையோ நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்"


கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.காலை 10.00

சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 மணி

சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.

ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.

கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!

இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!

1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10

மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.

நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.

கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?“ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!”

நன்றி ஆனந்த விகடன்

தத்துவமேதை காரல் மார்க்ஸ்

ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.

இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர்.

திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார்.

பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு.

தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எந்த திசை வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறார் என்பதை இந்தக் கட்டுரை அடித்தளமிட்டது.

பதினேழு வயதுச் சிறுவர்களுக்குரிய சிந்தனையிலிருந்து மார்க்ஸின் சிந்தனை முற்றிலும் மாறியிருந்தது.

உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப் பிறகு மார்க்ஸ் போன் நகரத்திலும், பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். அவர் சட்டவியலைத் தேர்ந்தெடுத்தாலும், தத்துவ ஞானத்தையும், வரலாற்றையும் மிகவும் விரும்பிப் பயின்றார்.

1814-ஏப்ரலில் இயெனா பல்கலைக் கழகத்தில் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து, தத்துஞானத்தில் டாக்டர் பட்டம பெற்றார்.

பத்திரிக்கைத் துறையை அறிந்து கொள்ள விரும்பிய மார்க்ஸ், ‘ரைன்’ பத்திகையில் 1842-ஏப்ரலில் வேலைக்குச் சேர்ந்தார். அதே வருடம் அக்டோபர் மாதம் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார்.

ஜெர்மனியின் அரசியல் நிலையையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மார்க்ஸ் அறிந்து கொள்ள பத்திரிக்கைப் பணி உதவியது.

சமூக - பொருளாதாரப் பிரச்சினைகளையும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளையும் பிரிட்டன், பிரான்சிலிருந்து வெளிவந்த சோஷலிஸ்டு நூல்கள் மார்க்ஸின் சிந்தனைக்கு உரமூட்டின.

பிரஷ்ய அரசாங்கம் ‘ரைன்’ பத்திரிக்கையைத் தடை செய்ய முயன்றது. அதனால் 1843- மார்ச் 17 - ல் அந்தப் பத்திரிக்கையிலிருந்து காரல் மார்க்ஸ் விலகினார்.

காரல் மார்க்ஸ் ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். அத்தகைய கவிதைகளில் ஒன்று;

“என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன்
‘எங்கே செல்கிறாய்? என்க்கொரு உலகம் தேடி!
இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே கடல்களும் மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்.
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்
நான் நெடுந்தூரம் ஊர்ந்து சென்றேன்
திரும்பினேன் கீழும் மேலும் உலகங்கள்
விண்மீன்களும் கதரவனும் துள்ளின
மின்னல் வெட்டியது நான் மடிந்தேன்”

‘தேடல்’ என்ற தலைப்பில் காரல்மார்க்ஸ் எழுதிய இந்தக் கவிதையை ஜென்னிக்குக் காணிக்கையாக்கினார்.

தன்னுடன் பயின்றவரும், தன்னைவிட மூன்று வயது மூத்தவரும், தன்னைவிட வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த வருமான ஜென்னியை மார்க்ஸ் மணந்து கொண்டார். மாணவப் பருவத்திலேயே ஒருவரை ஒருவர் விரும்பி, எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்திருந்தனர்.

காரல் மார்க்ஸ் தம்பதிக்கு ஜென்னி, எலியனோரா, லௌரா, பிரான்சிஆகா என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.

அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராகத் திகழ்ந்த காரல் மார்க்ஸ், தமது ஓய்வு நேரத்தை தமது குழந்தைகளுடன் விளையாடுவதிலும், கொஞ்சி மகிழ்வதிலும் செலவிட்டார். அவர்களோடு விளையாடும்போது காரல் மார்க்ஸூம் குழந்தையாக மாறிவிடுவார்.

ஒருவர் வினாத் தொடுக்க, மற்றவர் அதற்குப் பதில் சொல்லும் ‘வினா - விடை’ என்ற விளையாட்டு காரல் மார்க்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த விளையாட்டை குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த போது மார்க்ஸூம் அதில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் காரல் மார்க்ஸிடம் கேட்ட வினாக்களும் அதற்கு அவர் சொன்ன விடைகளும்…

“உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”
-எளிமை
“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”
-உறுதியான நோக்கம்
“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
-போராடுவது
“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”
-அடங்கி நடத்தல்
“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”
- அடிமை புத்தி
“உங்களுக்கு விருப்பமான தொழில்?”
-புத்தகம் படித்தல்
“உங்களுக்கு விருப்பமான நிறம்?”
-சிவப்பு.

குழந்தைகள் காரல் மார்க்ஸை நேர்கண்டபோது அவர் சொல்லிய கருத்துக்கள் ஒரு புரட்சிக்காரரின் வாக்குமூலமாக அமைந்துவிட்டது.

1843 அக்டோபரில் மார்க்ஸ் பாரிசுக்குச் சென்றார். இங்குதான் மார்க்ஸின் சிந்தனைகளுக்குச் சரியான வாய்ப்புக் கிடைத்தது.

புறநகர்ப் பகுதிகளில் வாழக்கூடிய தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், தத்துவவியலாளர்கள் ஆகியோரைச் சந்திப்பதிலும், அவர்களோடு விவாதிப்பதிலும் மார்க்ஸ் நேரத்தைச் செலவிட்டார்.

1844 பிப்ரவரியில் ‘ஜெர்மன் - பிரெஞ்சு ஆண்டு மலர்’ என்ற பத்திரிகையில் ‘யூதப் பிரச்சினையைப் பற்றி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி மார்க்ஸின் பார்வை இந்தக கட்டுரையில் வெளியிடப்பட்டது.

இடது சாரி ஹெகல்வாதியான புரூனோ பௌவரையின் கருத்துக்களுக்கு மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் பதில் கொடுத்திருந்தார்.

1842-ல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்துக்குச் சென்றபோது மார்க்ஸைச் சந்தித்தார்

1844 ஆகஸ்டில் மீண்டும் எங்கெல்ஸ் - மார்க்ஸ் சந்திப்பு நடைபெற்றது. இருவரின் சிந்தனையும் ஒன்றுபட்டு இருந்ததால் கூட்டாகவும், தனியாகவும் சிந்தித்து பல்வேறு படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிரஸ் அரசாங்கத்தின் நிர்பந்தத்தால், பிரான்சிலிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அதனால் 1845-ல் மார்க்ஸ் பிரஸ்ஸெல்சில் குடியேறினார்.

1847-ல் ஜூலை லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப்பின் இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில்தான் உலகத் தொழிலாளர்களுக்காக “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற புதிய கோஷத்தை மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் வழங்கினர்.

1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

1848- பிப்ரவரியில் பிரான்சில் புரட்சி வெடித்தது. அதை கண்டு அஞ்சிய பெல்ஜிய அரசாங்கம் மார்க்ஸைக் கைது செய்து நாடு கடத்தியது.

பாரிஸ், லண்டன், ஜெர்மன், பிரஸ்ஸெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளரகள் அமைப்புகளை வழி நடத்துவதிலும், கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்துவதிலும் மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் அயராது பாடுபட்டனர்.

தொழிலாளர்களின் அமைப்பு ரீதியான செயல்களில் ஈடுபடுவது; அந்ததந்த தேசத்தின் தொழிலாளர் நிலைகளையும் ஆளுவோரின் செயல்களையும் சேகரித்து, தொகுத்து தொழிலாளர்களின் பங்களிப்பு பற்றி எழுதுவது; தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிப்பது; அவற்றிற்குத் தலைமை ஏற்பது என்று பல்வேறு வடிவங்களில் மார்க்ஸூம் தொடர்ந்து செயல்பட்டனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற நூலாகக் கருதப்படும் ‘மூலதனம்’ என்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் 1867- செப்டம்பரில் வெளியிட்டார். இந்தப் பணிகளில் ஏங்கெல்ஸ் மார்க்ஸூக்கு பேருதவி புரிந்தார்.

இந்த நூலை மார்க்ஸ் எழுதி கொண்டிருந்த போது அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது. ஒருவேளை ரொட்டித் துண்டுக்கும் கூட அந்தக் குடும்பம் அல்லல் பட வேண்டியது ஏற்பட்டது. மார்க்ஸின் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது சவப்பெட்டி வாங்கக்கூடக் காசில்லாமல் மார்க்ஸின் குடும்பம் அவதிப்பட்டது.

மார்க்ஸின் மனைவி ஜென்னிக்கு மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிக்கு மருந்து கூட வாங்கக் காசில்லாமல் தவித்தனர். மார்க்ஸ் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ஏங்கெல்ஸின் உதவிதான் அவர்களுக்கு கை கொடுத்தது;

‘மூலதனம்’ மூன்று பாகங்கள் கொண்டதாகும். இந்த நூல்கள் இன்றும் சமுதாய மாற்றத்திற்குப் போராடும் வீரர்களின் கையேடாகவும், போர் வாளாகவும் திகழ்கிறது.

உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864-ல் செப்டம்பர் 28-ல் லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டிலதான் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கம். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார்.

1883-மார்ச் 14 -ம் தேதி காலையில் மார்க்ஸ் படுக்கையைவிட்டு எழுந்தார். படிப்பறைக்குள் நுழைந்தார்…. சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்… உட்கார்நபடியே மார்க்ஸ் மரணத்தை தழுவினார்.

மார்க்ஸின் மரணம் பற்றி, “நம் கட்சியின் மிகப்பெரும் அறிஞர் தம் சிந்தனையை நிறுத்திவிட்டார். நான்றிந்த அளவில் மிகவும் பலமான இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது” என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன்

மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது?

மரத்திலிருக்கும் பழம் ஏன் பூமியை நோக்கிக் கீழே விழுகிறது? அந்தப் பழம் மரத்திலிருந்து அதற்கும் மேலே ஏன் செல்லவில்லை?

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இறுதியில் பூமியை நோக்கி வருகின்றனவே ஏன்? இது போன்ற நிகழ்ச்சிகள் எதனால் நடக்கின்றன? என்று கூட எவரும் நினைத்தும் பார்த்ததில்லை.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது.

இங்கிலாந்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் சர் ஐசக் நியூட்டன் பிறந்தார். இந்த ஊர் அவர் பிறந்ததனாலேயே வரலாற்றில் இடம் பெற்றது.

அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள��
� என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும்.

உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு 1642. மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும் இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது.

கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்ற போது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார்.

பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது.

தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியை நியூட்டன் கற்றார்.

பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை.

ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். அதுவும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. கிடைத்த வேலையிலும் விருப்பத்தோடு பணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா?

ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே அந்தப் பணி. அதிலும் நான்காண்டுகள் ஈடுபட்டார் படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். கணிதத்தில் பட்டம் பெற்றார்.

விடுமுறைக்கு தமது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக் காடசிதான் அவரை சிந்திக்க செய்தது. மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது, என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது….

எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை கண்டுபிடித்து பூமிக்கு ‘புவி ஈர்ப்பு சக்தி உண்டு’ என்பதை நியூட்டன் கண்டறிந்தார்.

பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான்.

தமது இருபத்து ஆறாம் வயதில் தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்த நியூட்டன், இந்தப் பணியில் முப்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார்.

சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.

இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’ என்று குறிப்பிடப்படுகிறது..

நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம்.
‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான்.

நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். நாணயச் சாலை பாதுகாப்பாளராகவும் அவர் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை.

பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தமது 85 ஆம் வயதில் நியூட்டன் இறந்தார்.

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நியூட்டன் கல்லறை இருக்கிறது. இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.

மேரி க்யூரி!

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி

நமக்கு ஏற்படும் பல நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதற்கு உதவும் ‘ரேடியம்’ என்ற மாபெரும் விஷயத்தையே கண்டுபிடித்தவர் ஒரு பெண்!

பெயர் மேரி க்யூரி!

வாழ்வில் ஒரே ஒரு முறையாவது உலகின் சிறந்த விருதான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டுமென்று உலகம் முழுக்க பலர் வெறித்தனமாக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, தன் வாழ்வில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி இவர். ஆனால் இந்தப் பெண் விஞ்ஞானி இந்தச் சாதனையை அடைவதற்காக தன் உடல் நலன், குழந்தைகள், காதல் என்று எத்தனை விஷயங்களை இழக்க வேண்டி வந்தது என்பதெல்லாம் ஒரு உருக்கமான சோகக் கதை!

போலந்து நாட்டின் வார்ஸா நகரில் வசித்த ஒரு ஆசிரியர் குடும்பம் அது...

மேரியின் அப்பா சீர்திருத்தப் பள்ளி உட்பட பல பள்ளிகளை நடத்தி வந்தார். குழந்தைகள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். மேரியின் அம்மா பெண்கள் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர்.

இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மேரிதான் கடைக்குட்டி.

மேரிக்கு நான்கு வயதானபோது, அவளது சித்தப்பா அந்தக் குடும்பத்தோடு வந்து தங்க விரும்புவதாக ஒரு கடிதம் போட்டார். அந்தக் கடிதம் தான் மேரியின் இந்தச் சாதனைக்கே ஒரு ஆரம்பமாக அமைந்தது.

‘தாராளமாக வந்து தங்குங்கள்’ என்று அந்த சித்தப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியபோது மேரியின் குடும்பத்துக்கு அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் தெரியாது. கடுமையான காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சித்தப்பா! இப்போது எய்ட்ஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய்களைக் கண்டு நாம் பயன்படுவது போலவே அந்தக் காலத்தில் காசநோய்க்கு பயப்பட்டார்கள். பயந்தது போலவே மேரியின் அம்மாவுக்கும் அவரிடமிருந்து காசநோய் தொற்றிக் கொண்டது.

இந்த நோயின் காரணத்தால் போலந்தில் இருந்து அவ்வபோது தெற்கு பிரான்ஸில் இருந்த வெப்பப் பகுதிகளுக்கு சென்று நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டியநிலை மேரியின் அம்மாவுக்கு. சொந்த வீட்டிலேயே தனி அறையில் வாழவேண்டிய கட்டாயம் வேறு. ஒரே கூரையின்கீழ் இருந்தும் அம்மாவை பிரிந்து வாழ்ந்ததுதான் மேரி சந்தித்த முதல் சோகம்.

அதோடு தீரவில்லை... மேரிக்கு ஒன்பது வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்போதுதான் மேரியின் மனதில் ஒரு உறுதி ஏற்பட்டது.

மேரி மட்டுமல்ல... அவரது தாய்நாடான போலந்தும் ஒரு பெரிய சோதனையை அப்போது சந்தித்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டை கைப்பற்றிய ரஷ்யாவிற்கு எதிரான புரட்சியில் மேரியின் தாத்தா, அப்பா எனக் குடும்பமே பங்கேற்க, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

நல்ல வேளையாக வாத்தியார் வீட்டுப் பிள்ளைகள் என்பதாலேயே மேரியோடு பிறந்தவர்கள் அனைவருமே, அவரவர் வகுப்புகளில் முதல் ரேங்க் எடுத்தார்கள். ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு எந்த வசதியும் அந்த ஊரில் இல்லை. அதிகபட்சம் பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரில் ஒரு டீச்சராக வேலை செய்யலாம் என்கிற நிலைதான் பெண்களுக்கு! மேரிக்கு எப்படியும் மேற்கொண்டு படிக்க வேண்டும்... மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் ஏதாவது, புதிதாக கண்டு பிடித்து, மனித குலத்துக்கு உதவவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. தவிர, பள்ளி இறுதிப் படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார் மேரி. முடிவாக மேரியும் அவளது அக்கா ப்ரோனியாவும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். அதன்படி முதலில் மேரி ஒரு வீட்டில் வேலைக்குச் சேரவேண்டும். இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு அவள் அக்கா, பாரீஸ் நகரில் தங்கி மருத்துவம் படிப்பார். அக்கா மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தவுடனே, தங்கை மேரியின் பட்டப்படிப்புக்கு அவர் பண உதவி செய்ய வேண்டும்!

இந்தத் திட்டத்தின்படி ஒரு வீட்டில் வேலை செய்து அந்தப் பணத்தை தன் அக்காவுக்கு அனுப்பி வந்தார் மேரி. கடமையோடு காதலும் வந்தது. அந்த வீட்டின் முதலாளியின் மகனும் மேரியும் ஒருவரையருவர் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்தக் காதல், கல்யாணத்தில் முடியவில்லை. காரணம் மேரி ஒரு பணக்காரி இல்லையே!

தனது முதல் காதல் இப்படி பொடிப்பொடியானதும் மேரி மனதளவில் உடைந்துவிட்டாள். இனி படிப்புதான் தனக்கு எல்லாமே என்று முடிவெடுத்தாள். சொன்ன வாக்குப்படியே அக்கா, தன் படிப்பு முடித்தவுடனே மேரி படிக்க உதவினாள். மேரியும் பாரிஸ் நகருக்குச் சென்று ஆறு வருடங்கள் கொண்ட பட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்தாள். அங்கும் கூட, கல்லூரியில் படித்த இரண்டாயிரம் பேரில் வெறும் இருபத்து மூன்று பேர்தான் பெண்கள்! அக்காவுக்குத் திருமணமான பின்பு ஒரு ஃப்ளாட்டில் தனியேதான் வசித்துக் கொண்டிருந்தார் மேரி.

அந்த நாட்களில்தான் துடிப்பான இளைஞனான பியரி க்யூரியைச் சந்தித்தாள் மேரி. ஏற்கெனவே பீலோ எலக்ட்ரிசிட்டியைக் கண்டுபிடித்தப் பெருமை அந்த இளைஞனுக்கு இருந்தது. இருவருமே அவரவர் காதலில் தோல்வியுற்று இருந்த நேரம் அது. ஒரே மாதிரி நிலை... தவிர இருவருக்குமே விஞ்ஞானத்தில் பெரும் விருப்பம். ‘நாம் கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டான் அந்த இளைஞன்.

கல்யாணம் என்றதுமே மேரிக்கு இயல்பான குடும்ப வாழ்க்கையால் தன் லட்சியம் பாதிக்கப்படுமே என்ற தயக்கம் வந்தது. ‘‘அதனால் என்ன? அடுத்தடுத்த ப்ளாட்களில் தனித்தனியாக வசிப்போம். மற்றபடி கணவன் மனைவியாக இருப்போம்’’ என்று சொன்னார் பியரி.

இவர்கள் கல்யாணம் செய்துகொள்வதில் வேறொரு சிக்கலும் இருந்தது. பியரி போலந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. மேரி அவரைத் திருமணம் செய்துகொண்டால் மீண்டும் போலந்துக்குத் திரும்பி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி மக்களுக்கு சேவை செய்வது என்பது முடியாத காரியமாகிவிடும். ஆனால் பியரியோ இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘அதனாலென்ன... நான் போலந்துக்கு வருகிறேன். அங்கு உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து சில மாதங்களில் இருவருக்குமே ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து வாழ முடியாது என்று புரிந்து விட்டது. எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

காதலால் இணைந்த அந்த ஜோடி அடுத்த பதினான்கு வருடங்களும் கதிரியக்கப் பொருள்களைப் பற்றியே ஆராய்ச்சி செய்தார்கள். அதற்கு முந்தைய ஒரு வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியத்தைச் சுற்றியே அவர்களது பல ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. எப்போதுமே எந்தவொரு சாதனையிலுமே ஒரு ஆணை ஒத்துக்கொள்ளும் அளவுக்கு சிலர் பெண்களை ஒத்துக் கொள்வதில்லை. மேரியின் ஆராய்ச்சி விஷயத்திலும் இது நடந்தது. எல்லாமே கணவர் பியரியின் ஐடியாக்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வாய் அடைபடும்படி, தான் அவ்வப்போது எழுதி வைத்திருந்த பல விஞ்ஞானக் குறிப்புகள் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார் மேரி க்யூரி.

அணுக்கள் உள்ளன என்பதையே கி.பி.1900 வரை எல்லா விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அணுக்களுக்குள்ளே நடைபெறும் கதிரியக்கம் குறித்து மேரி சொன்னபோது சக விஞ்ஞானிகள் அதை வெறும் கேலியாகவே பார்த்தார்கள். ஏற்கவும் மறுத்தனர். ஆனால் கடைசியில் மேரி க்யூரியின் முடிவுதான் சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

தோரியம் என்ற கதிரியக்க இயல்பு கொண்ட பொருளைக் கண்டுபிடித்தார் மேரி.

கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வேறொரு பெரிய ரகசியத்தையும் கண்டுபிடித்தார்கள். என்ன அது? கதிரியக்கம் என்பது ரசாயனப் பொருள்கள் ஒன்றோடொன்று இணைவதினால் ஏற்படுவது அல்ல என்பதையும், குறிப்பிட்ட பொருளின் (அதாவது அணுவின்) இயல்பைக் கொடுப்பது கதிரியக்கம்தான் என்பதையும் கண்டுபிடித்தனர். ஆக ரேடியம் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தது மேரிதான்.

இத்தனைக்கும் தம்பதியர் இருவரும் சோதனைகள் செய்த பரிசோதனைச் சாலை மிகவும் சிறியது. ‘அட... ஏதோ உருளைக் கிழங்கு கிடங்கு மாதிரி இருக்கிறது. இதிலா பரிசோதனை செய்கிறார்கள்!’ என்று கேலி செய்தார்கள் மற்றவர்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை இந்த தம்பதியர்.

மனைவி மேரி செய்த இந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ரேடியத்தை தன் தோலின் மீதே ஊற்றிக் கொண்டார் கணவர் பியரி. இதனால் அவர் கையில் கட்டி ஏற்பட்டது. அப்படி செய்த ஆராய்ச்சியின் மூலமாக ‘தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத கட்டிகளுக்கு’ சிகிச்சை செய்ய ரேடியத்தை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார் மேரி. ‘கியூரி தெரபி’ என்றே இதற்குப் பெயரிட்டார்கள் இந்தத் தம்பதியர்.

அணுவின் மர்மங்களை மேலும் அறிய கணவரும் மனைவியும் முயற்சித்தார்கள். இதன் விளைவாக ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ என்ற புதிய கோட்பாடு உருவானது. அறிவியலின் மிகப்பெரிய திருப்புமுனை இது.

அந்த வருடம் தான் மேரி தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட வருடம்! இந்தக் கண்டு பிடிப்புக்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு கணவன்_மனைவி என இருவருக்குமே கிடைத்தது!... விருது கிடைத்த பின்பு தங்கள் மோசமான உடல்நிலை பற்றி சுத்தமாக மறந்து விட்டு, இன்னும் அதிக ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் இந்தத் தம்பதியர்.

ஆனால், யுரேனியம் போன்ற பொருள்களில் இருந்து ரேடியத்தைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. டன் கணக்கான பாறைகளிலிருந்து பத்தில் ஒரு பங்கு ரேடியத்தைத் தயாரிக்கவே மேரிக்கு பல ஆண்டுகள் பிடித்தன.

உலகமே ரேடியத்தின் அற்புத சக்தியைப் பாராட்டியது. இந்தப் பாராட்டிலும், தன் லட்சியத்தை நிறைவேற்றும் மகிழ்ச்சியிலும் மேரி, தன்னுடைய உடலின் ஆரோக்கியக் குறைவை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருந்துவிட்டார்.

கதிரியக்க சாம்பிள்களைத் தொடர்ந்து கையாண்டதால் அந்த தம்பதியர் விரல்களின் நுனி கறுத்து இறுகிப் போனது. உடல் இளைத்தது. மகள் ஐரனே பிறந்த பிறகு உருவான அடுத்த குழந்தையும் குறைப்பிரசவத்தில் இறந்து போனது. இந்தக் குடும்பக் கவலைகள், அவர்கள் நோபல் பரிசு பெற்ற சந்தோஷத்தையே மழுங்கடித்தது. கதிரியக்கத்தால் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளால் நோபல் பரிசைக்கூட நேரில் சென்று வாங்க முடியவில்லை இவர்களால்!

அந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு டாய்லெட் இணைக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினார்கள் இந்தத் தம்பதியர். பிரான்சில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி அப்போது உண்டு.

இந்தத் தம்பதிக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததன் காரணமாக, பிரான்ஸ் அரசு இவர்களின் கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக நிதி உதவியும்கூட செய்தது.

கணவர் பியரியின் உடல்நிலையோ வேகமாக சீரழிந்துக் கொண்டிருந்தது. மேரியாலும் முழுமையாக ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியவில்லை. இரண்டாவதாகப் பிறந்த ஈவா என்ற மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் வேறு சேர்ந்து கொண்டது. ஒரு மழைக்கால மதியத்தில் தனியே வெளியே நடந்துக் கொண்டிருந்த பியரியின் பார்வை திடீரென மோசமடைய, எதிரில் வந்த குதிரை வண்டியின் முன் விழுந்தார். குதிரையும், வண்டியும் அவர் மேல் ஏற, உடனடியாக இறந்துவிட்டார்.

மேரியால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. இறந்தது அன்பான கணவன் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் கூடவே வந்த துணையும் ஆயிற்றே! பியரி பணிபுரிந்த இடத்தில் மேரியைப் பேராசிரியராக பணிபுரிய அனுமதித்தது பிரான்ஸ் பல்கலைக் கழகம். பிரான்ஸ் நாட்டில் இப்படியரு உயர் பதவியை வகித்த முதல் பெண்மணியே மேரிதான்!

சிறிது நாட்களிலேயே குடும்பத்தை நிர்வகித்து வந்த மாமனாரும் (பியரியின் அப்பா) இறந்தவுடன் வீட்டில் குழந்தைகள் மேலும் இடிந்துபோனார்கள். இதற்கு நடுவே மேரியின் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு ஆதரவு தேவைப்பட்ட மேரியின் மனதுக்கு இதம் தந்தது பால் என்பவரது பேச்சு. இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றாலும் மனைவிக்கும் அவருக்கும் கடும் கருத்துவேறுபாடுகள். இந்த நிலையில்தான் பாலும் மேரியும் காதல் வசப்பட்டார்கள். ‘‘நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து, முழுதாக பிரிந்துவிடுவதுதான் நமது இணைப்பிற்கான முதல் படியாக இருக்கும்’’ என்று ஒரு கடிதத்தை அனுப்பினார் மேரி.

ஆனால், மேரியின் போதாத காலம், இந்தக் கடிதம் பாலின் மனைவி ஜினியிடமே கிடைத்துவிட்டது. ஜினியின் அண்ணன் ஒரு நாளிதழின் ஆசிரியர். மேரியின் புகழைக் கெடுக்கும் வகையில், அந்தக் கடிதத்தின் சில பகுதிகளைத் தன் தினசரி பேப்பரில் பிரசுரம் செய்தார் அவர். ஏற்கெனவே, மேரி தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல... ஆனாலும் இவ்வளவு புகழ் பெறுகிறாளே என்று மேரியைக் குத்திக் கிளற சமயம் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு இது பெரிய வாய்ப்பாகப் போய்விட்டது. இந்த விஷயத்தையே சாக்காக வைத்து அவரை அவமானப்படுத்தி, எப்படியாவது அவரை பிரான்சிலிருந்து வெளியேற்றத் துடித்தார்கள். மேரியின் பரிசோதனைச் சாலையைச் சுற்றி வந்து கலாட்டா செய்தார்கள்.

‘‘என் அறிவியல் பணிகளையும் அந்தரங்க வாழ்க்கையையும் இணைத்துப் பேசுவது சரியல்ல. என் வாழ்க்கைத் தொடர்பான வதந்திகளின் நிழலை எனது ஆராய்ச்சிகளின் மீது படிய விடுவது அனாவசியம்’’ என்று சொன்னார் மேரி. ஆனால் மேரிக்கு எதிரான கலவரங்கள் மேலும் மேலும் அதிகமாகத்தான் ஆயின.

இந்தக் காலகட்டத்தில், ரேடியம் மற்றும் பொலானியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக மேரிக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேரிக்கு எதிர்ப்புகள் மிக அதிகமாக இருக்கவே ‘விருது பெறும் நிகழ்ச்சிக்குக் கூட நீங்கள் நேரடியாக வரவேண்டியது கட்டாயமல்ல’ என்றார்கள் நோபல் குழுவினர். ஆனால் மனத்துணிவுடன் நேரில் சென்றே பரிசைப் பெற்றுக்கொண்டார் மேரி.

தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சிகளால் தன் இரண்டு பெண்களுக்கும் இளம் வயதில் போதிய கவனிப்பை மேரியால் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் வளர வளர தாயும் மகள்களும் மிகவும் பாசத்துடன் ஒன்றுபட்டார்கள். இசையில் ஆர்வம் கொண்ட ஈவா, வீட்டிலேயே இருந்து கொண்டு நிர்வகிக்க, மேரியும் அவரது மூத்த மகள் ஐரனேவுமாக குண்டு காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கத் தொடங்கினார்கள்.

இதற்காக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள முந்நூறு மருத்துவ மனைகளுக்குச் சென்று வந்தார்கள். உடலுக்குள் குண்டு தங்கிய இடத்தை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து ராணுவ டாக்டர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

ஐரனேவுக்கு இருபத்தெட்டு வயதானபோது அவருக்குத் திருமணம் நடந்தது. கணவர் ஜீவியெட்டும் ஒரு விஞ்ஞானியே என்பதுதான் சிறப்பம்சம்! இந்தக் கணவன் மனைவி இணைந்து செயற்கைக் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார்கள். இதற்காக இந்தத் தம்பதிக்கும் நோபல் பரிசு வழக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரான்ஸ் நாட்டின், அணுசக்தி திட்டத்தின் சிற்பியாகவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் ஜீவியெட். ஆக கணவன், மனைவி, மகள், மருமகன் என நால்வருமே நோபல் பரிசு பெற்று பெரும் சாதனையைப் படைத்தார்கள்!

‘ரேடியம் இன்ஸ்டிடியூட்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார் மேரி. ஆனால், கதிரியக்கம் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக, மேரிக்கு கண்களில் கேடராக்ட், காதில் எப்போதும் ஒலி, தோலில் மாற்றம் போன்ற பல பாதிப்புகள் இருந்து கொண்டேயிருந்தன. ஆனால் மேரி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னால் மனிதகுல முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஓய்வில்லாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி க்யூரி, கடைசியில் புற்று நோயால் இறந்தார். அவரது சாம்பல் பாந்தியாம் என்ற கவுரவமிக்க இடத்தில் இன்னும்கூட வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)


விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy 's Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton 's Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth 's Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo 's Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter 's Satellites] படமெடுத்தது!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்!
சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது.

நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்ற கேள்வி எனக்கு எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்ற மனநோய் எனக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே விரும்புவேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாதவர்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.

அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒருவேளை கதைகள் உண்மையாக இருக்கலாம் என்றும் நினைப்பேன். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நான் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.

அவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை என்னால் அறியமுடிந்தது. நான் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.

என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளைப் போல வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியாக கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.

வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை செவ்விந்தியர் விரும்பவில்லை. தொடர்ந்து சிறுசிறு குழுக்களாக செவ்விந்தியர்கள் வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.

ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.

1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோயல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவத்தையும் கற்று திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வந்தார்.

1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி கொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.

பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிக்கோ குடியிருப்புகள் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை ரேஞ்சில்) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.

நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கு அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.

ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.

அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் வேர்களையும், கலாச்சாரத்தையும் இழந்துவிட்டு..

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்

இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை)

முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்த்தால்...


வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0))
அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...)
இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலமை (Offline reading)


மேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் மறந்து உங்களுக்குப் பிடித்த வலைப் பூக்களை ஒரே இடத்தில் படித்து மகிழ, குறிப்பாக இணையத் தொடர்பு இல்லாத நேரங்களிலும் படிக்க (இலங்கையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...) சிறந்த வழி என்ன என்று யோசிக்கும் போது உடனடியாக நினைவில் வருவது Google reader

28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை

லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார்.
63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார்.

இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார்.

தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் பார்ப்பார். ஆனால், இவர் அளவுக்கு அல்ல. இவருக்கு பிடித்த படம் லாரன்ஸ் ஆ அரேபியா, பிரிட்டிஷ் டைரக்டர் டேவிட் லீன் தான் இந்த படத்தை இயக்கினார்.

மதுவால் உயர்ந்தவர்-Karan Faridoon Bilimoria


இங்கிலாந்தில் இன்று 96 மில்லியன்களுக்கு பவுண்களுக்கு மேற்பட்ட விற்பனையாகவும் 6000 உணவங்கள்,5000க்கு மேற்பட்ட மதுபானசாலைகள், பெரும்பாலும் அனைத்து மொத்த சில்லறை வியபாரநிலையங்கள் 30க்கு மேற்பட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியுடன் பிரித்தானியாவின் மதுபான சந்தையிலே மிகக்குறுகியகாலத்திலே தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது கோபுரா பியர். இத்தகைய வளர்ச்சி ஒரு இரவில் நடந்தது அல்ல இத்தகைய வளர்சியை ஏற்படுத்தியவர் Karan Bilimoria ஆவார்.

எங்கே போகிறது உலகின் பொருளாதாரம்?


அமெரிக்காவின் பொருளாதாரத்திலே ஏற்பட்டுள்ள வீழ்சியினால் இன்று உலகின் பொருளாதாரத்திலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று உணவுப்பொருட்களுக்கான விலையானது என்று இல்லாதவாறு அதிகரித்துள்ளதுடன் உணவுப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை,சோளம் என்பனவற்றுக்கு பெருமளவிலே தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசியை ஏற்றுமதி செய்கின்ற இந்தியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இலங்கையிலே அரசாங்கமானது அரிசிக்கு கட்டுபாட்டு விலை விதித்துள்ளது.

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.

எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.


ஜுலை 20 புரூஸ் லீயின் நினைவு தினம். தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.

1940 நவம்பர் மாதம் 27-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி Linda Emery-ஐ சந்தித்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'Batman' படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது 'The Green Hornet', 'Iron Side', 'Here Come the Brides' ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'Crawn Colony Cha Cha' சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'Way to the Dragon' படம் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆஃப் தி டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'Way to the Dragon' படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் தி ட்ராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை 'என்டர் தி ட்ராகன்' ரிலீஸாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை!

சச்சினுக்கு தலைமுறையின் சிறந்த வீரர் விருது!

கொல்கத்தா விளையாட்டு செய்தி நிருபர்கள் சங்கம் வழங்கும் இந்த தலைமுறயின் சிறந்த விளையாட்டு வீரர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் இந்திய அணித் தலைவரும் சக வீரருமான சவ்ரவ் கங்கூலியும் நடிகர் தேபஸ்ரீ ராயும் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினர்.

விருதை பெற்றுக் கொண்டு பேசிய சச்சின் நன்றி தெரிவித்ததோடு, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு தனிச்சிறப்பான உணர்வு என்றார்.

அணியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு திறமையை நிருபித்ததற்காக கங்கூலிக்கும் சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

கொல்கத்தா விளையாட்டுச் செய்தி நிருபர் சங்கம் பேட்மின்டன் வீரர் பிரகாஷ் பதுகோனிற்கு வாழ் நாள் சாதனை விருது கொடுத்து கவுரவித்தது.

இந்திய கிர்க்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவிற்கு சிறந்த இளம் வீரர் விருது கிடைத்துள்ளது.