உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.
இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இம்மென்பொருளானது கையில் எடுத்துச் செல்லக் கூடிய "லப் டொப்' கணினிகளிலான செயற்பாட்டு குறைபாடுகள் மற்றும் தரவுகள், படங்கள், ஆவணங்கள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் என்பனவற்றுக்கு சிறந்த பரிகாரம் அளிப்பதாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.
மிக நிறை குறைந்த, காவிச் செல்லக் கூடிய கணினி செயற்பாட்டு முறைமையை உருவாக்கும் இலக்கில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மிதோரியானது, மாறுபட்ட பல கணினி பிரயோகங்களை இலகுவாக கையாளக் கூடிய ஒன்றாக அமையும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய கணினிகளின் விற்பனையுடன் 80 சதவீதமான "விண்டோஸ்' விற்பனையும் இடம்பெற்று வருவதால், புதிதாக "மிதோரி' மென் பொருளை பாவனைக்கு கொண்டு வருவதில் பெரும் நடைமுறைச் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.