ஞாபக மறதி
நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .
இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.
உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்
பல் மருத்துவர்
பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.
மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.
உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.
அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.
அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.
கிராமவாசி
கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்.
சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு வாலிபர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட முதலாவது வாலிபர், காணாமல் போன என் மனைவியை தேடிக் கொண்டு வந்ததால் உங்களை பார்க்காமல் மோதிவிட்டேன் என்றார்.
அதற்கு இரண்டாவது வாலிபர் பரவாயில்லை என்று கூறி, நானும் காணாமல் போன என் மனைவியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். மேலும், உங்கள் மனைவி எப்படி இருப்பாள் என்று கூறுங்கள் என்று கேட்டார்.
உடனே முதலாமவர், என் மனைவி சிவப்பாக, உயரமாக இருப்பாள் என்றும் பச்சை நிற புடவை கட்டியிருப்பாள் என்றும் கூறிவிட்டு, உங்கள் மனைவியின் அடையாளத்தை கூறுங்கள் என்றார்.
அதற்கு இரண்டாமவர், அவரைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர் போனால் போகட்டும். முதலில் உங்கள் மனைவியை தேடுவோம் என்றார்.
மாப்பிள்ளை
வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.
மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.
பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.
இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.
மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்.