ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம்.
சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தாய்வழியில் இன்றளவும் புகழ்பெற்ற வெட்ஜ்வுட் என்ற சீன முறை பீங்கான் பாத்திரங்களையும் கலைப்பொருட்களையும் தயாரிக்கும் குடும்பம். தந்தை எராஸ்மஸ் டார்வின் அந்த நாட்களில் பிரிட்டனின் முதல்தர அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர். முதலில் மருத்தவம் பயில ஆசைகொண்ட டார்வின் ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் கிறிஸ்தவ மதபோதகராக மாற கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்த நாட்களில் கிறிஸ்துவத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றைத் தன் கண்டுபிடிப்புகள் தகர்க்கப் போகின்றன என்று அறிந்திருக்கமாட்டார்.
கேம்ப்ரிட்ஜில் இயற்கை வேதாந்தம் (Natural Theology) என்ற பாடத்தைப் படிக்க நேர்ந்தார். அப்பொழுது ஜான் ஹெர்ஷெல் (John Herschel) என்பவரின் புத்தகம் ஒன்றைப் படித்தார். அதில் “சுற்றிலும் இருப்பவற்றைக் கூர்ந்து நோக்குதலில் வழியே இயற்கையின் நடைமுறை விதிகளை அறிந்து கொள்வதே இயல் தத்துவத்தின் (Natural Philosophy) உச்சம்” என்ற ஹெர்ஷல் விளக்கம் டார்வினை மிகவும் ஈர்த்தது. கூடவே ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஃபன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்ற மேதையின் பயணங்களின் வழியே உலகையும் இயற்கையையும் புரிந்துகொள்ளும் உன்னதத்தைப் பற்றிய விளக்கம் சேர்ந்துகொள்ள நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதனூடாக இயற்கை விதிகளை ஆய்வதில் டார்வினுக்கு ஆர்வம் பெருகியது.
1831-ல் ஹெச்.எம்.எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் இங்கிலாந்தில் தொடங்கி, தென்னமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாக தென்கோடியில் இருக்கும் ஃபால்க்லண்ட் என்ற தீவிற்குச் சென்றார். அங்கிருந்து மேற்குக் கடற்கரை வழியாக தென்னமெரிக்காவின் வட மேற்கில் இருக்கும் கலாபகஸ் என்ற தீவுக்கூட்டத்தில் பல நாட்கள் தங்கினார். அங்கிருக்கும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாவரங்களையும் அவர் இதுவரை வேறெங்கும் கண்டதில்லை. தனித் தீவுக்கூட்டத்தில் தனிமை வாய்ந்த உயிரினங்கள் எப்படி வந்தன, அவை ஏன் அங்கே நன்றாகச் செழித்து வளர்கின்றன என்று அவருக்குத் தோன்றிய கேள்விதான் நாம் இன்றைக்கு பூமியில் உயிரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும் குறித்த புரிதல்களுக்கு வழிகாட்டுகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியா வழியாக மீண்டும் இங்கிலாந்தை ஹெச் எம் எஸ் பீகிள் 1836 ஆம் ஆண்டு வந்தடைந்தது.
தன் கடற்பயணத்தின்போது சேகரித்த தகவல்கள், தரவுகள், பயணக்குறிப்புகள் இவற்றின் மீது கிடத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ச்சியான ஆய்வை மேற்கொண்டார் டார்வின். தொடர்ந்து அவர் எழுதிய On the Origin or Species by Means of Natural Selection என்ற புத்தகம் 1859-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதில் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற அமைப்புகளைப் பெற்றிருக்கும் உயிரினங்கள் அவ்வாறு ஏற்பில்லாத உயிரினங்களைக் காட்டிலும் எளிதில் எப்படி ஜீவிக்க முடிகிறது என்று விளக்கினார். வலுவற்றவை தங்காமல் அழிந்துபோக வலுவுள்ளவற்றின் சந்ததி எளிதில் பெருகிறது.
சந்ததிப் பெருக்கத்தில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு வேறு குணங்களைக் கொண்ட ஒரு புதிய உயிரி பிறந்தால் அது சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்து தன் குணங்களைக் கொண்ட சந்ததியைப் பெருக்குகிறது. இதுவே தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் புதுப்புது உயிரினங்கள் தோன்ற வழிவகுக்கிறது.
டார்வினின் இந்தக் கோட்பாடு அந்த நாட்களில் (ஏன் இன்றுகூட) பலத்த சர்ச்சைக்குள்ளானது. கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆதி கடவுள் இந்த உலகை ஏழு நாட்களில் படைத்தார். ஆனால் டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின்படி உயிரியலில் மேல்நிலையிலுள்ளவை அவற்றின் கீழிருக்கும் உயிரினங்களில் ஏற்பட்ட தற்செயலான மாறுதல்களால் படிப்படியாக வளர்ந்து உருவானவை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்.
டார்வினின் பரிணாமக் கோட்பாடு கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நூற்றைம்பது வருடக் கேள்விகளும் ஆய்வுகளும் அதற்கு மேலும் வலுவைத்தான் சேர்த்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் உயிரிகளில் மரபைத் தாங்கி இனப்பெருக்கத்தின்போது அதை முன்னெடுத்துச் செல்லும் டி.என்.ஏ-வின் அமைப்பும் செயற்பாடும் புரிந்துகொள்ளப்பட்டது. இப்பொழுது உயர்நுட்ப மரபியல் ஆய்வுகளின் வழியே மூலக்கூறு அளவில் துல்லியமாகப் பரிணாமம் எப்படி செயற்படுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒற்றைக் குரோமோசோமின் இழைவழியே இருக்கும் மாறுபாட்டைக் கடந்த சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருகிறார்கள்.
டார்வின் வாழ்ந்த காலத்தில் மரபணுக்களைப் பற்றிய அறிவு கிடையாது, டி.என்.ஏ, குரோமோசோம் இவற்றைப் பற்றித் தெரியாது. இன்றைக்கு அவர் வாழ்ந்திருந்தால் தன் கண்டுபிடிப்புகள் துல்லியமான சோதனைகளில் நிரூபணமாவதைக் கண்டு மகிழ்வார் என்பது நிச்சயம். டார்வினின் அறிவியல் முறை தனித்தன்மையாது. மலையுச்சியில் நின்று கடற்கரைப் பெரும்பரப்பை அவர் கண்டார். அங்கிருந்த ஒவ்வொரு செடி, கொடி, விலங்கு, மீன், தொடங்கி அங்கே கிடைக்கும் கனிமங்கள், பெய்யும் மழையளவு, மாறும் காலநிலை, பிற நிலங்களுக்கும் அதற்கும் இருக்கும் மாறுபாடுகள் இவற்றைத் துல்லியாம ஆராய்ந்தார். அப்பொழுதும் அவரால் முழு பெருநிலப்பரப்பின் பெரும நிலையையும் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.
ஒற்றை மணற் துகளில் உலகத்தைக் காணும் தனித்திறன்தான் டார்வினை இருநூறு வருடங்களுக்குப் பிறகும் நாம் கொண்டாட முக்கிய காரணம்.
நன்றி - யாழ்