இளவரசி டயானா (Diana)


உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.

அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!

பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.

டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...

லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..

வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.

வெளியே...

பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.

ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!

‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.

‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.

பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...

‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’

என்று கூட்டம் திமிற...

ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..

அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின.

அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.

டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!

எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.

ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!

டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!

டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.

அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.

மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்.

திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.

அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.

குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.

தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.

இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.

மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.

டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.

சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.

டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.

அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.

பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்?


ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி பதிவு செய்கின்றேன்.

மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து.

இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்..

அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓர் இடத்தில் நீ இருக்கத்தான் வேண்டும் என்ற தாயின் குரலுக்கு, எனக்கு இருக்க நேரமில்லை அம்மா என்றவாறே ஒரு கையில் ரொட்டித்துண்டை(Sandwich) ஏந்தியபடி மறு கையால் பந்தை அடித்தபடி வெளியேறி விடுவான்.

ஆம் அவன்தான் றிக் ஹான்சன் போர்ட் அல்பேர்னி (Rick Hansen) , பிரிட்டிஷ் கொலம்பியா, கனடாவில் பிறந்து, வில்லியம்ஸ் லேக்கில் வளர்ந்தவன். ஏப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பான்.

தூண்டில் மூலம் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காகக்கொண்ட றிக் மற்றய நேரங்களில் ஏதாவதொரு வகைப்பந்தை தட்டி அடித்து உறுட்டி எறிந்தபடியே இருப்பான்.
அனைத்து வகையான விளையாட்டிலும் ஈடுபாடு கொண்ட றிக்கின் விருப்பத்துக்குரிய விளையாட்டாக கரப்பந்து (Volleyball) இருந்தது.

தனது 15வது வயதில் (1973), நணபர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற .றிக், திரும்பி வரும் வழியில் ஓர் வாகன விபத்திற்கு உட்பட்டான். தூன் பயணம் செய்த வாகனத்தில் இருந்த தூக்கி எறியப்பட்டு, நினைவு திரும்பியதும் றிக்கால் தனது கால்களை உணர முடியவில்லை. உங்களால் இனி நடக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என மருத்துவர் கூற றிக் சிரிக்கின்றான். ஆவன் ஓர் விளையாட்டு வீரன். எலும்பு முறிவு ஏற்படுவதும் பின்பு சரிப்பண்ணுவதும் விளையாட்டில் சாதாரணம்தானே. அவனைப் பார்வையிட வந்த நண்பர்களின் சோர்ந்த முகங்களைப்பார்த்து, நான் விரைவில் வீடு திரும்பி விடுவேன் என்று உற்சாகமாகப் பதிலளிப்பான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அது ஒன்றும் இலகுவில் சீர் செய்யக்கூடிய பிரச்சினையாக இருக்கவில்லை. இரவு நேரங்களில் றிக்கை அவனின் பெற்றோர்கள் மட்டுமே அறிவர் எப்படியாவது இதை இயங்கப் பண்ணுங்கள் என்று கெஞ்சுவான். ஓர் இடத்தில் இருக்கவே பிடிக்காத மகன் எழுந்து இருக்கப் பிரியப்படுகிறான். ஆனால் எதுவுமே செய்ய முடியாத பெற்றோர்.

றிக்கின் இடுப்புக்கு கீழே அங்கங்கள் செயலிழந்து விட்டன. அவனது முதுகெலும்புத் தண்டு முறிந்து விட்டது Spinal Cord Injury), கால்களில் சக்கரங்கள் கட்டிக்கொண்டது போல் பறந்து திரிந்த றிக்கிற்கு அன்று முதல் சக்கரங்களே கால்களாகின.

நடக்கும் சக்தியை இழந்து விட்டதும் றிக் துவண்டுபோய் அடைபட்டு கிடந்தாரா? இல்லை. அவர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார், தன் சக்கர நாற்காலியில் பாடசாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளராக கடமையாற்றினார்.
சுக்கர நாற்காலியில் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் வென்றார். கனடா சக்கர நாற்காலி கரப்பந்து விளையாட்டில் இவரது அணி முதலிடம் பெற்றது. புpன் இங்கிலாந்து சென்று உலக கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்றார்.

என்னால் ஓராயிரம் விடயங்களை முன்புபோல் செய்ய இயலாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நான் செய்யக்கூடிய பல்லாயிரம் விடயங்கள் இருக்கின்றன என நம்பிக்கையோடு கூறி வருகின்றார்.

ரொரி பொக்ஸ் உம் றிக்கும் நல்ல நண்பர்கள். ஓன்றாக சக்கர நாற்காலியில் கூடைப்பந்து விளையாடியவர்கள். ரொரி பொக்ஸ், கால்கள் இயலாமல் போனபோதும் தன் கனவுகளை நிறைவேற்றிய விதம் அவர் மறைவுக்குப் பின் றிக் மனதில் ஆழப்பதிந்தது. றுpக் தன் கனவுகளைப் பற்றி சிந்திக்கலானார். ஆங்கவீனமானவர்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த விரும்பினார். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்கும் எண்ணினார்.

ஆவரின் கனவு மார்ச் மாதம்21, 1985 அன்று நனவாகியது. ஆம் அன்று தனது சக்கர நாற்காலியில் உலகைச்சுற்றிவர தன் குழுவுடன் புறப்பட்டார். தினமும் இரண்டு மரதன் தூரங்கள் பயணித்தார். கைகள் வலித்தன, காலநிலைகள் குறிக்கிட்டன. ஆனால் அவரின் மன உறுதி அனைத்தையும் வென்று பயணம் முன்னேறியது. 34 நாடுகளினூடாக அவர்களின் பயணம் அமைந்தது. இப்பயணத்தை முடிக்க அவர்களுக்கு 2 வருடங்கள், 2மாதங்கள், 2 நாட்கள் எடுத்தன. 26 மில்லியன் டொலர்களுக்கு மேலாக நிதியும் திரட்டினர். றிக்கின் செய்தி உலகெங்கும் சொல்லப்பட்டது.

தனது பயண முடிவில், அவரது சிகிச்சையாளரும்(Physiot Herapist) அவரது பயணத்தின் முக்கிய உறுப்பினருமாக இருந்த அமன்டா ரைட்(Amanda reid) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தம் மூன்று பெண் பிள்ளைகளுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

அவரது பயணம் முடிந்தாலும் றிக் ஓய்ந்து விடவில்லை. அவரின் கனவுகளும், குறிக்கோள்களும் மென்மேலும் வளர்ந்தன. றிக் ஹைன்சன் அமைப்பகம் ஒன்றை நிறுவி, முள்ளந்தண்டு பாதிப்படைந்தவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அதனூடாக உழைத்தார்..

முதுகெலும்புத் தண்டு முறிவுக்கு வைத்தியங்களே கிடையாத அந்த நேரத்தில், ரெரி பொக்ஸ் புற்று நோய் ஆராட்சிக்கு எப்படி நிதி திரட்டினாரோ அதேபோல் முதுகெலும்புத் தண்டு முறிவுக்கும் ஆராட்சிக்காக நிதி திரட்டி, இன்று 200 மில்லியன் டொலர்களுக்கு மேல் சேர்த்து, இவ்வாண்டு 2008 நடுப்பகுதியில் வன்கூவரில் ஓர் பிரத்தியேக மருத்துவமனையை திறந்து வைக்கின்றார்.

றிக்கின் சாதனைகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். இன்றும கனடா முழுவதும் இளைஞர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது சாதனைகளில் முக்கியமாக, சொந்தப் படைப்புக்களான "Man In Motion" " Going For The Distance" போன்ற புத்தகங்கள் அதிக பிரதிகளை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது. "Going For The Distance."எனும் சுய முன்னேற்றப் புத்தகத்தில், எவ்வாறு குறிக்கோள்களை அடைவது என்பது பற்றியும், எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும், மனிதனுக்கு எவ்வளவோ கஷ்டங்கள், பிரச்சினைகள் வருகின்றன, ஆனால் அவன் எவ்வாறு அவற்றை கையாள்கின்றான் என்பதைப்பொறுத்தே அவன் வாழ்க்கை அமைகின்றது என்று கூறியுள்ளார். அதை செயல்மூலமும் காண்பித்து வருகின்றார்.

பெப்ரவரி மாதம் 2007இல், கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்ப்பர், றிக் ஹான்சன் அமைப்பகத்திற்கு 30 மில்லியன் டொலர்களை வழங்கி, றிக் ஹைன்சனின் உழைப்பையும் சாதனைகளையும் பாராட்டி ஒரு உண்மையான கனடிய கதாநாயகனாக றிக் ஹைன்சனை வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆம் யாழ்கள உறவுகளே, றிக்கின் கதையை நாம் கதைபோல வாசிப்பதிற்கு மாறாக ஆழமாகச் சிந்தித்து, தனது குறிக்கோளை அமைத்து வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்துள்ளார் என்பதை கவனத்தில்கொண்டு நாமும் எங்களது வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த முயற்சிப்போமாக.