பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு
சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.
சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்.
சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக்கடி கலந்துக் கொண்டு பாடுவது வழக்கமாம். இவரது கம்பீரமான இனிய குரல் கண்டு பஜனை குழுவினர் இவரை அடிக்கடி பாட அழைப்பார்களாம்.
பள்ளிக் கூடத்தில் சின்னப்பா நான்காவது வகுப்பு வரையில் படித்திருக்கிறார். ஆனால் அவருக்கு படிப்பில் அதிக ஈடுபாடு இல்லாததால் அதை நிறுத்தி விட்டு நாடகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டார்.
சின்னப்பாவின் ஆசை நாடகத்தின் மீதும் இசையின் மீதும் தான் என்று நினைக்க வேண்டாம். அவருக்கு ஐந்தாவது வயதான போதிலிருந்தே குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் ஆகியவைகளிலும் அதிக விருப்பம் உண்டு. இப்படியாக அவரது எதிர்கால வாழ்க்கைக்கான முடிவு ஒன்றும் ஏற்படாமல், பல எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது குடும்பம் ஏழ்மை நிலையிலிருந்தது. வருமானமோ போதவில்லை.
சின்னப்பா குஸ்தி போட்டுக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுமா என்ன? அதனால் ஏதாவது ஒரு சிறு தொகையையாவது அவர் சம்பாதித்தாக வேண்டியதாயிருந்தது. அதனால் அவர் கயிறு திரிக்கும் கடையொன்றில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். நல்ல வேளையாக அவர் சில மாதங்களுக்கு மேல் இந்த வேலையில் நிலைக்கவில்லை.
கடைசியில் சின்னப்பா நாடகத் தொழிலிலேயே ஈடுபடவேண்டும் என்று அவரது தந்தை தீர்மானித்தார். அதன் படி சின்னப்பா தம் 8வது வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரில் இக்கம்பெனி பழனியாப்பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது இந்தக் கம்பெனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய நடிகர்களாய் நல்ல புகழுடன் செல்வாக்குடனும் விளங்கி வந்தனர்.
கம்பெனியில் சேர்ந்த சின்னப்பாவை கவனிப்பாரில்லை. அவருக்குக் சில்லரை வேடங்களே கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் இருந்தால் தாம் முன்னுக்கு வர முடியாது என்பதை சின்னப்பா உணர்ந்து கொண்டு அந்த கம்பெனியிலிலுந்து ஆறு மாதத்தில் விலகி விட்டார். அந்த சமயத்தில் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெளி புதுக்கோட்டையில் நாடகம் நடத்தி வந்தது. ஸ்ரீ நாராயணன் செட்டியார் என்வரின் சிபாரிசின் பேரில் சின்னப்பா அந்தக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 15 ரூபாய் மாத சம்பளத்தில் சின்னப்பா 3 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார்.
சின்னப்பாவுக்கு நடிக்க வேண்டும் பாட வேண்டும் என்ற பேராவல் அதிகம் இருந்தது வந்தது. ஆனால் அவருக்கு ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் முதலில் சாதாரண வேடங்கள் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், அவர் மற்ற வேடங்கள் சம்பந்தப்பட்ட வசனங்களைப் பேசுவது, பாட்டுகளைப் பாடுவது போன்றவைச் செய்து வந்தார்.
அவர் ஒரு நாள் கம்பெனி வீட்டில் சதி அனுசூயா நாடகப் பாட்டுகளை மிகவும் ரசித்து பாடிக் கொண்டிருந்தாராம். இவர் பாடியது மேல் மாடியிலிருந்த கம்பெனி முதலாளியான ஸ்ரீ சச்சினதாந்த பிள்ளையின் காதுக்கும் எட்டியதாம். இவ்வளவு நன்றாகப் பாடியவர் யார் என்று விசாரித்தாராம். அது சின்னப்பா என்ற தெரிந்ததும், அவரை மேல் மாடிக்கு வர வழைத்தார். அந்த பாடல்களை மீண்டும் பாடச்சொல்லி கேட்டார். அவருக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நிமிடமே அவர் சின்னப்பாவின் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்தினார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பாவை கதாநாயகனாக உயர்த்தப்பட்டார்.
அந்த கம்பெனியில் சின்னப்பா கதாநாயகன் நடிகனாக விளங்கியபோது, திரு.எம்.ஜி.ஆர். , பி.ஜி.வெங்கடேசன் , பொன்னுசாமி , அழகேசன் போன்றவர்கள் சின்னப்பாவின் ஜோடியாக பெண் வேடத்தில் நடித்து வந்தானர். மற்றும் காளி என்.ரத்தினம் , எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்கள் சக நடிகர்களாய் விளங்கி வந்தனர்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகங்களிலேயே அப்பொழுது அதிகமான வசூலை அளித்தவகையில் ஒன்று பாதுகா பட்டாபிஷேகம் ஆகும். இந்த நாடகத்தை அவர்கள் சென்னையில் தொடர்ந்தால்ப் போல் ஒரு வருட காலம் நடத்தினார்கள். பரதன் வேடத்தில் தோன்றி வந்த சின்னப்பா பிரமாதமாக பொது மக்கள் ஆதரவைப் பெற்றார். புராண நாடகங்களில் மட்டுமல்லாமல் சந்திர காந்தா ராஜேந்திரன் போன்ற சமூக நாடகங்களிலும் சின்னப்பா தனிப் புகழ் பெற்றார்.
நாடக மேடையில் சின்னப்பா நடிப்பில் மட்டுமின்றி பாட்டிலும் மிகப் புகழ் பெற்றார். அப்பொழுதெல்லாம் பக்தி கொண்டாடுவோம் என்ற பாடல் மிக பிரபலமாக விளங்கியது. இந்த பாடலை சின்னப்பா மேடையில் பாடும்போது குறைந்தது அரை மணி நேரமாவது ஆகுமாம். அந்த அளவுக்கு ராக தாளத்துடன் பாடுவாராம் .சின்னப்பா பாடி முடிந்ததும் சங்கீத மழையில் மீண்டும் நனைவதற்துத் தான் அன்றைய ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்காத நாளே கிடையாதாம். இந்தப் பாட்டு அந்நாளில் சூப்பர் ஹிட் ஆகி மூலை முடுக்குகளில் எல்லாம் கூட சாதாரணமாக மக்களின் வாயில் ஒலித்து வந்நது.
அந்த மாதிரி மேடையில் சின்னப்பா நடிப்பிலும் பாட்டிலும் மிகப்புகழ் பெற்றதற்கு திருஷ்டி ஏற்பட்டு விட்டது போலும். அவரது புகழ் உச்ச நிலையில் இருந்த போது, அவரது தொண்டை உடைவது நாடக மேடை நடிகர்களின் தொழிலுக்கு ஒரு பெரிய கண்டம் ஆகும். இதிலிருந்து தப்பியவர்கள் ஒரு சிலர் தப்பாமல் மறைந்தவர்கள் அநேக பேர்.
பசு நிறைய பால் கறக்கும் வரையில் அதற்குப் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு, பசும்புல் உபசாரத்துடன் அளிக்கப்படும். பால் மறத்துப் போய் விட்டதென்றாலோ வெறும் வைக்கோலையும் பச்சைத் தண்ணீரையும் கொண்டு தான் அது உயிர் வாழ வேண்டும். இந்தப் பசுக்களைப் போலத்தான் அன்றைய பாய்ஸ் கம்பெனி பையன்ளையும் முதலாளிகள் நடத்தி வந்தார்களாம். பையன்களுக்கு குரல் இனிமையாக இருக்கும் போது கம்பெனிகளில் அவர்களுக்கு மரியாதையும், ராஜயோகமும் உபசாரமும் பலமாயிருக்குமாம். அத்துடன் அழகான துணிகளும், நல்ல ஸ்பெஷல் சாப்பாடும், கைவிரல்களுக்கு மோதிரம், காப்பு, காதுக்குக் கடுக்கன், சையின் எல்லாம் ஒன்றொன்றாய்ச் செய்து போடுவார்களாம். பையனின் உறவினர்கள் வரும் போது அவர்களுக்கும் பிரமாதமான விருந்து நடக்குமாம்.
குரல் உடைந்து, இனிமை குறைய ஆரம்பித்ததும், மேற்படி நகைகள் ஒவ்வொன்றாய் கழட்டபடுமாம். ராஜயோக மரியாதைகளும் தனிச்சாப்பாடும் ஒவ்வொன்றாய் குறைந்து போகுமாம். கடைசியில் பையன் கம்பெனியிலிருந்து விலக வேண்டிய நிலமை ஏற்படும் போது, கோவலன் மாதவியை விட்டுப்பிரியும் காட்சியைத்தான் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியருக்குமாம்.
பையனிடம் உள்ள நல்ல துணிமணிகளும், படுக்கை, பெட்டி, சாமான்கள் முதலியயாவும் பறிமுதல் செய்யப்படுமாம். அது மட்டுமல்ல பையனுக்கு நல்ல திசையிருந்து வந்த காலத்தில் அவனுக்குப் பொது மக்களால் அளிக்கப்பட்ட தங்க, வெள்ளி மடல்கள்,பரிசுகள் இவைகளையும் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் முதலாளிகள். பையனுக்கு கம்பெனி பாக்கி நிறைய இருந்ததாகவும், அதற்காகவே இப்பறிமுதல் வைபவம் நடந்ததாகவும் அவர்கள் காரணம் கூறி விடுவது வழக்கமாம். பையன் ஆண்டிக்கோலத்தில் நிராதரவாய்,அழுத கண்ணுடன் வருவானாம்.
அந்த காலத்தில் பையன்கள் உருப்படாமல் போனதற்கும் அவர்கள் கம்பெனிக்குக் கம்பெனி தாவியதற்கும், நாடக நடிகர்கள் ஏழ்மை நிலைமையிலேயே உழன்றதற்கும், நாடக முதலாலிகளின் இத்தகைய மோசமான பகற்கொள்கை நடத்தை தான் காரணம் என்று சின்னப்பா கூறியுள்ளார். இந்த விஷயமெல்லாம் நாடகப் பையன்கள் எல்லோருக்குமே தெரிந்தது தான் இருந்தது. ஆனால் அவர்களால் பாவம் என்ன செய்ய முடியும்.
தனிச்சாப்பாடு, தனிச்சம்பளம், மரியாதைப் போச்சு, தங்கச் சங்கிலி காப்பும் கழட்டலாச்சு, விட முடியுமோ இந்தக் கனவான் ஒரு மூச்சு.
வெளியேற்றிடவும் ஏற்பாடு செய்யலாச்சு! என்று இது போன்று கிண்டல் பாடட்க்களை பாடி, ஒருவருக்கொருவர் தமாஷ் செய்து கொள்வது ஒன்று தான் அவர்களால் முடிந்தது. வேதனையிலும் அவர்களுக்கு ஒரு வேடிக்கை.
சின்னப்பாவுக்கும் இந்த நிலைமையெல்லாம் தெரிந்திருந்தது. அவரது நிலைமையெல்லாம் தெரிந்தது. அவரது குரல் தகராறு செய்ய ஆரபித்தவுடனயே, தமக்கும் சீக்கிரமே இது போன்ற வெயியேற்று உபசாரங்கள் ஆரம்பமாகிவிடும் என்பதை உணர்ந்தார். ஆனால் மற்ற பையன்களை போலவே தாமும் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கு ஆளாகி, அழுத கண்ணுடன் அநாதையாய் வெளியேற விரும்பவில்லை. ஆதலால் அவர் பல நாள் யோசித்து கடைசியில் ஒரு யோசனை தோன்றியது.
முதலில், தம் பாட்டிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும் ஒரு முறை வந்து விட்டுப் போகும் படியும் தகப்பனாரை தந்தி கொடுக்கும் படி செய்தார். பிறகு தம் பெட்டியை எம்.ஜி.சக்கரபாணியிடம் கொடுத்து விட்டு, அவரது பெட்டியைத் தாம் வாங்கிக் கொண்டு சின்னப்பா மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் விலகி தந்திரமாக தம் ஊர் போய் சேர்ந்தாராம்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியை விட்டபின் சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கலானார்.
இந்த சமயத்தில் அவருக்கு தம் சங்கீதத் திறமையை விருத்தி செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. திருவையாறு சுந்தரேச நாயனக்காரரிடம் காரை நகர் வேதாசல பாகவதரிடம் சில காலம் சின்னப்பா சங்கீதம் கற்றுக்கொண்டார். சுமார் 500 உருப்படிகள் வரை அவர் பாடம் பண்ணி விட்டார். வர்ணம், பல்லவி, ஸ்வரம், இவைகளையெல்லாம் அவர் கற்றுக் கொண்டார். நாடக மேடையை மறந்து சங்கீத வித்துவானாகவே மாறி விட வேண்டும் என்று அவர் அப்போது நினைத்தார். ஆனால் இவை மூலம் அவருக்குக் கிடைத்த வருமானம் அவருடைய தேவைக்கு போதாமலிருந்தது? அதனால் தான் அவர் சங்கீத வித்வானாவதற்கு தீவிரமாய் முயலவில்லை.
சங்கீதத்தை ஒரு பக்கம் பயின்ற படியே சின்னப்பா தேகப் பயிற்சி வித்தைகளையும் கற்றுக் கொள்ள தொடங்கினார். புதுக்கோட்டையில் உள்ள தால்மியான் கொட்டடி என்கிற சாமியாசாரி கொட்டடியில் சேர்ந்து ராமநாத ஆசாரியிடம், கத்திச் சண்டை, கம்புச்சண்டை, போன்றவைகளில் நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இது தவிர சுருள் பட்டா வீசுவதிலும் சின்னப்பா சூரர் ஆகிவிட்டார்.
சுருள் பட்டா என்பது அந்தக்காலத்தில் ஊமையன் உபயோகித்த ஆயுதமாகும். அதாவது கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் போன்ற இந்தக் கத்தியின் ஒரு நுனியைக் கையில் மாட்டிக் கொண்டு சுமார் 30 அல்லது 40 அடி தூரத்திலுள்ள எதிரி மீது வீசுவார்கள். கத்திச் சுருள் மின் வேகத்தில் பறந்து கொண்டு செல்லும். அதன் நுனியில் பொருத்தப்பட்ட கத்தி எதிரியின் தலையைக் கொத்திக் கொண்ட பின் மீண்டும் சுருண்டு கொண்டு வீசியவரிடமே தலையுடன் வந்து விடும். ஆனால் இந்தப் பட்டா வீசுதலுக்கு மிகுந்த பயிற்சியும் தைரியமும், அவசியமாகும். குறி தவறாகவோ, அஜாக்கிரதையாகவோ வீசினால் எதிரியின் தலைக்குப் பதில் வீசியவரின் தலையே பறிபோய் விடும்.
காரைக்குடியில் சாண்டோ சோம சுந்தரம் செட்டியார் என்பவர் ஒரு தேகப்பயிற்சிக் கழகத்தை நடத்தி வந்தார். இக்கழகத்தில் சின்னப்பா சேர்ந்தார் ஸ்ரீ சத்தியா பிள்ளை என்ற வாத்தியாரிடம் அவர் குஸ்தி கற்றுக்கொண்டார்.
வெயிட் லிப்டிங் அதாவது கனமான குண்டுகளைத் தூக்குவது. இதிலும் சின்னப்பா பயிற்சி எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான போட்டியில் 150 பவுண்டு வரையில் தூக்குபவர்களுக்கெல்லாமே ஒரு வெள்ளி மெடல் பரிசு வழங்கப்படுவது வழக்கமாம். சின்னப்பாவே 190 பவுண்டு வரையில் தூக்கி விசேஷப் பரிசுகளைப் பெற்றிருக்காராம்.
அன்றைய மைசூர் சமஸ்தானத்தில், பயில்வான் பசுவய்யாவுக்கு அடுத்த பயில்வான்களாக நஞ்சுண்டப்பா, ஆஷக் உஷேன், சியாமசுந்தர் முதலியவர்கள் புதுக்கோட்டைக்கு விஜயம் செய்தபோது அவர்களுடன் பாராட்டு பெறுவதற்காக ரகசியமாய் குஸ்தி போட்டுப் பார்த்திருக்கிறாராம் சின்னப்பா. புதுக்கோட்டையின் சுற்றுப்புரங்களில் ஆண்டுதோறும் குஸ்திச் சண்டை, கம்புச் சண்டை, கத்திச் சண்டை இவை சம்பந்தமான காட்சிகள் நடைபெறுவது வழக்கமாம். சின்னப்பா சிலமுறை தம் பெயரை மாற்றி வேறு பெயர் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு குஸ்திச் சண்டையிட்டுக் காட்டியிருக்கிறாராம்.
உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீ பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடுவது ஒரு ஆபத்தான விளையாட்டல்லவா? இந்த விளையாட்டை சின்னப்பா புதுக்கோட்டையில் அன்றைய நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் செய்து காட்டி, சிறப்பு பரிசுகளை சின்னப்பா பெற்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் சின்னப்பபாவுக்கு நிரந்தரமான வருமானம் இல்லாதிருந்தது. நாடகங்களுக்கு கூப்பிட்டால் போவார். கச்சேரிசெய்ய அழைத்தால் அதற்கு செல்வார். குஸ்தி, கம்புச் சண்டை போன்ற போட்டிகளிலும் கலந்துக் கொள்வார். வேற கொஞ்சக் காலம் சொந்தமாக ஒரு பயிற்சி நிலையமும் நாடக கம்பெளியையும் நடத்தியும் பார்த்திருக்கிறார். எதையானாலும் சரி துணிந்து செய்து பார்த்துவிட வேண்டும் என்று மனப்பான்மை உடையவர் சின்னப்பா. இதற்கு உதாரணமாக அவர் கொஞ்ச காலம் மாந்திரீகம் கற்றுக் கொண்டதைக் குறிப்பிடலாம்.
ஸ்பெஷல் நாடகங்களுக்கு போய் வந்த நேரத்தில் சின்னப்பா ஸ்ரீ கந்தசாமி முதலியாரை மானேஜராகக் கொண்ட ஸ்டார் தியேட்டரிகள் என்ற கம்பெனியில் சேர்ந்து, அந்த குழுவுடன் ரங்கூனுக்குப் போய் நாடகங்களில் நடித்து விட்டு வந்தார். எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜி.சச்ரபாணி, பி.ஜி.வேங்கடேசன் ஆகியோர் இந்த குழுவுடன் இருந்தனர். ரங்கூன் ஹரி கிருஷ்ணன் ஹாலில் சுமார் ஆறுமாத காலம் நாடகங்கள் நல்ல ஆதரவுடன் நடைபெற்றன. ராஜம்மாள், சந்திரகாந்தா போன்ற சமூக நாடகங்கள் மிகுந்த பொதுமக்கள் ஆதரவை பெற்றன.
சினிமாவில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்னப்பா புளியம்பட்டிக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும், பல ஊர்களில் எம்.ஆர். ஜானகியுடன் நிறைய நாடகங்களில் நடித்து விட்டு இந்தியா திரும்பினார். சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும், பாட்டும், சிறப்பாக அமைந்திருந்தன.
சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்தது இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே சின்னசாமி என்ற பெயர் சின்னப்பா வாக மாறியது.
பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே கொஞ்ச காலம் படங்களில் நடிக்காமலிருக்க வேண்டியதாயிற்று. முதலில் தொண்டை தகராறு செய்தது. பிறகு அவருக்கு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காமற் போனது. இவையேல்லாம் அவரது மனதைக் கலக்கி விட்டன. இதன் விளைவாக அவர் கடுமையான வைராக்கிய விரதங்களைத் தொடங்கினாராம். சுமார் நாற்பது நாள் அவர் சரியான அன்ன ஆகாரமின்றி மௌன விரதத்தை கடைபிடித்து வந்தாராம். அதனால் அவர் உடம்பு மிகவும் இளைத்துப் போயிற்றாம். இந்த சமயத்தில் தான் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் அவரை பார்க்க வந்தார்.
தொழிலின்றி இருக்கும் நடிகர்களுக்கு துணிந்து சந்தர்ப்பம் அளிப்பதிலும், புதிது புதிதாய் நடிகர்களைப் படங்களில் புகுத்துவதிலும் சாதனை படைத்தவர் டி.ஆர்.சுந்தரம், ஆகவே வேலையின்றி இருந்து வந்த சின்னப்பாவைத் தேடிப்பிடித்து தம் உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடத்தை அளித்தார்.
1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது. சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும், சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்தது. அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல் இடத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் ஆக்டர் ஆக திகழ்ந்தார்.
அதன் பின்னர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம் பாராட்டுதல் பெற்றார்.
இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.
பிருதிவிராஜனில் பிருதிவிக்கும், சம்யுத்தைக்கும் ஏற்பட்ட கதைக் காதல் அவ்வேடத்தில் நடித்த சின்னப்பா, ஏ.சகுந்தலா இவர்களிடையே நிஜக்காதலாய் முடிந்தது. இருவரும் தம்பதிகளாயினர்.
சின்னப்பா ஏ.சகுந்தலாவை 05.07.1944.ந் தேதி அன்று சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார். பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக ஆக்கியது.
கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மஹா மாயா ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது. ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில் படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.
சின்னப்பாவின் பாட்டுகள் இசைத்தட்டுகளில் வெளிவந்த நல்ல விற்பனையாகியது. ரேடியோவில் ஒரே ஒரு தடவை ( 1938ம் வருடம்) பாடியிருக்கிறார். ஆனால், அவர்கள் அப்போது அளித்த சன்மானம், சின்னப்பாவுக்கு இதற்காக ஏற்பட்ட செலவை விடக் குறைவாயிருந்ததால் ரேடியோ விஷயத்தில் அவர் அக்கறையே கொள்ளாமல் விட்டு விட்டாடர்.
சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி முதலியவையாகும். கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.
மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.
சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசி படங்கள் வன சுந்தரி, ரத்னகுமார், சுதர்ஸன் ஆகும். சுதர்ஸன் என்ற படம சின்னப்பா மறைவுக்கு பிறகு தான் வெளிவந்தது.
சின்னப்பா பத்திரிகை விமர்சனங்களுக்கும், பத்திரிக்கை காரர்களுக்கும் தனி மதிப்பளித்து வந்தார். ஒரு முறை லட்சுமிகாந்தன் இவரைப் பற்றி ஏதோ எழுதியிருந்ததை ஒரு நண்பர் இவரிடம் எடுத்துக் காட்டினாராம். லட்சுமிகாந்தனைத் திட்டுவதற்குப் பதிலாக, சின்னப்பா நம்மிடம் ஆயிரம், ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க அவைகளை எடுத்துக் காட்டுபவரிடம் எதற்காக சண்டை போட வேண்டும் என்று கேட்டாராம்.
தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
சின்னப்பாவுக்கு ஒரே மகன் அவர் பெயர் பி.யு.சி.ராஜபகதூர் ஆகும்.
ராஜபகதூர் கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
கோயில் புறா படம் அவருக்கு எந்த பெயரும் வாங்கி தரவில்லை. இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.
சினிமாவில் ராஜபகதூர் வளர்ந்து வந்த நேரத்தில் காலமானார்.
நன்றி : இணையம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment