அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம்.
அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த கருவியின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், இருவரும் தலைகுப்புற கீழே விழுந்தனர். 500 அடி உயரத்திற்கு மேலிருந்து விழுந்ததால் அல்சிடிஸின் சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அல்சிடிஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை, கால்கள் மட்டுமல்லாமல் அவரின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அல்சிடிஸுக்கு 12 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான குருதியும் ஏற்றப்பட்டது. ஆறு மாதங்களாக கோமாவிலிருந்து அல்சிடிஸ் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் அல்சிடிஸுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில்;
பிழைக்கமாட்டார் என்று தான் நினைத்தோம். தீவிரமான சிகிச்சையின் பலனாக பிழைத்துவிட்டார். அதிர்ஷ்டமும் அவருக்கு உதவியுள்ளதெனக் கூறியுள்ளனர்.
காயம் முழுவதும் குணமடைந்துவிட்டது. ஆனால், முன்புபோல் நடக்க முடியவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என அல்சிடிஸ் தெரிவித்துள்ளார்.
thinakural.com
No comments:
Post a Comment