இன்று நாமெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுவான விஷயம் தமிழ்ப் பண்பாடு மாறிக்கொண்டு வருகிறது.
இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதுதான். ஆனால் உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது.
நல்ல காரியங்கள் நான்கு நடக்குமுன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. அதுவும் வெட்டுவது குத்துவது என்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. நாய் சேகர் மாமா மாதிரி ‘எல்லோரும் கேளுங்கள். நான் கொலை செய்யப் போறேன். கொலை செய்யப் போறேன்.’ என்று அறிவிப்பு செய்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது. அப்படியென்ன மனித உயிரின் மதிப்பு மலிவாகிவிட்டதா?
இப்படிக் கொடூர நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் அந்தப்பகுதியில் பார்த்தால் ‘என்ன கொடுமை சார் இது’ என்று ஆதங்கம்படும் அஹிம்சாவாதிகளாக நிறையப் பேர் மாறிவிடுவார்கள். ஆனால் மறுநாள் அதே அஹிம்சாவாதிகள் ‘நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று (ஏதாவது சொல்லி தனது தலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே) கையை வீசிக்கொண்டு காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
இப்படி சமுதாயத்தில் எந்த தீய செயல்கள் நடந்தாலும் பாவப்படுவதும் பரிதாபப்படுவதுமே இந்த சமூகத்தினரின் கடமையாகிவிட்டது. இப்படிப்பட்ட செயல்கள் ஏன் நடக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க யாரும் விரும்பவில்லை.
சமுதாயம் என்பதில் நாம் எல்லோரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது. வேலை வெட்டியின்றி வீண் விவாதங்களில் ஈடுபடும் ஒரு சமூகம் இருக்கிறது. இதற்காக பல நாடுகளில் பல நிறுவனங்கள் ஒரு குழுவை அமைத்து அவர்களை விவாதிக்கச் செய்து அதை தொலைக் காட்சியிலும் ஒளிபரப்புவார்கள். அந்த விவாதங்கள் பெரும்பாலும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு இப்படி விவாதத்திற்கு வந்த விஷயம் மூன்றாம் உலகப் போர் வருமா? வராதா? அவரவர் நாட்டின் நாணயங்களை விரல் வலிக்கச் சுண்டிப்போட்டு விவாதித்தார்கள். (ஒரு வேளை நாணயம் நட்டுக்கு நின்றிருந்தால்.. அதற்காக தனி ஓவர் டைம் எடுத்து விவாதித்திருப்பார்களோ!.) இந்த விவாதத்தில் நாஸ்டர்டாமின் ஆருடத்தையும் பக்கபலமாக அமர்த்திக் கொண்டார்கள்.
சரி ஒருவேளை நாணயத்தில் தலை விழுந்து இவர்கள் விவாதப்படி மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று வருகிறதோ! இல்லையோ! (வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம். மீண்டும் ஒருமுறை பூமித்தாயின் சரீரம் களங்கமடைய வேண்டாமே) இன்று உலகமெங்கும் தீவிரவாதம் என்னும் பேர்வையில் தினம் தினம் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
‘இன்று என்ன கொடூரக் காட்சிகளைக் காணவேண்டி இருக்குமோ’ என்று என்ணி காலையில் உதிக்கும் சூரியன்கூட யோசனை செய்துதான் மேலெழும்பி வருகிறது. அதே சூரியன் அந்திவானில் மறையும்பொழுது அந்தச் செவ்வானம் சிவக்கிறதோ இல்லையோ பூமித்தாயின் சரீரம் செந்நிறக் குருதியால் நித்தம் நித்தம் சிவந்து கொண்டல்லவா இருக்கிறது!.
இந்த சமூகத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நீசர்களின் கொடூரப் பயணம் எதை நோக்கியது. எந்த தேசத்தை ஆள்வதற்கு? எந்த மக்களை ஆள்வதற்கு? இல்லை இவர்கள் மட்டும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிடப் போகிறார்களா? இதற்கெல்லாம் விடை அவர்களுக்கே தெரியாது.
ஒரு வேளை லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று பல நாடுகளைச் சீரழித்து கொள்ளையடித்து, ‘சக்கரவர்த்திகள்’ ‘மாமன்னர்கள்’ என்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் (இவர்களைக் கொடூரர்களாகச் சித்திகரித்து இருக்கலாம்) இவர்களும் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணுகிறார்களா.
பிடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் திறமை, நேர்மை, உண்மை என்ற நல்ல பண்புகளைவிட பணம் திடமானது. (சரித்திரம் எழுதுபவர்கள் ஜாக்கிரதை. அமெரிக்கர்கள் முதன்முதலில் சந்திரனுக்குச் சென்றது உண்மையா? பொய்யா? என்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டது போல் இந்த சரித்திரமும் சர்ச்சையாகிவிடப் போகிறது. நம்மைவிட நமது சந்ததியினர் உஷார் பார்ட்டிகள்.)
மீண்டும் கேள்விக்கு வருவோம். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா? இதற்காகப் பட்டி மன்றம் வைத்தால் பின்லேடனும் ஜார்ஜ் புஷ்ஷ_ம் ஒரே அணியில் சேர்ந்து விடுவார்கள். எதிரணிக்குத்தான் ஆள் தேட வேண்டும். அந்தப் பொறுப்பை நடுவர் சாலமன் பாப்பையா அவர்களிடம் விட்டுவிடுவோம். ஆனால் தீர்ப்பு மட்டும் ‘மனித உயிரின் விலை விலைவாசியைப் போல் உயர உயரப் பறக்கிறது’ என்பதாகத்தான் இருக்கும். காரணம் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை நடந்த யுத்தங்களின் மொத்த எண்ணிக்கை 14500. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 364 கோடி.(இதில் பல லட்ச, சொச்சங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.) இந்த அழிவுக்கான மொத்தச் செலவு 50 லட்சம் கோடிகளுக்கு மேல் என்றால் நாம் அழிவுப்பாதையில் எந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்தக் காலத்தில் அதாவது இந்த யுத்தங்கள் நடந்து முடிந்த காலகட்டங்களில், ஒரு வீட்டுக்கல்ல, ஒரு நாட்டுக்கல்ல இந்த உலகம் முழுவதற்கும் ஒரு ஆண்டுக்கு ஆன மொத்தச் செலவே ஒரு லட்சம் கோடிதான் . ஆனால் நம்மை நாமே அழிப்பதற்காக 50 லட்சம் கோடிகளைச் செலவு செய்திருக்கிறோம். வேதனைப்பட வேண்டிய விஷயமல்லவா இது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட மாமன்னன் ஜூலியஸ் சீசர் தான் நடத்திய யுத்தத்தில் ஒரு எதிரி என்ற பேர்வையில் ஒரு உடன் பிறவா சகோதரனைக் கொல்ல அவன் செலவழித்த தொகை வெறும் 75 பைசாதான். ஆனால் அதற்குப் பின் கி.பி.1800ல் நெப்போலியன் நடத்திய யுத்தத்தில் ஒரு மனித உயிரைக் கொல்ல ஆனச் செலவு ரூ.24000.
முதலாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அமெரிக்கா செலவழித்தது ரூ.168000. அதன் பிறகு நடந்த இரண்டாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அதே அமெரிக்காவின் செலவு ரூ16 லட்சம். பார்த்தீர்களா! வெறும் 75 பைசா 24000ரூபாயாகி 168000ரூபாயாகி கடைசியில் 16 லட்சமாகிவிட்டது. ஆனால் இன்று இந்தச் செலவு கோடிகளாகிவிட்டது எனலாம்.
இன்றைய குண்டர்களும் கொலைகாரர்களும் தீவிரவாதிகளும் மனித உயிர்களைக் கொல்ல வாங்கும் பணம் பலகோடி ‘பவர்கட்’ ரகசியம். இப்படி நம்மோடு ஒருவராக வாழும் ஒரு சகோதரனைக் கொல்ல வருங்காலத்தில் பல நூறுகோடிகளைக் கூடச் செலவழிப்பார்கள்.
இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தொகையை உற்பத்தி செய்து பெருக்குவதுபோல் பல நாடுகளும் அணு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன். இவையெல்லாம் யாரைத் தாக்குவதற்காக? எந்த உலகத்தை அடிமைப்படுத்தி ஆள்வதற்காக? எல்லாம் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காகத்தான்.
சரி ஒரு வேளை மூன்றாம் உலகப்போர் வருகிறதென்றே வைத்துக் கொள்வோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். என்ன நடக்கும் என்று. இரண்டு சிறு பயல்கள் (லிட்டில் பாய்ஸ் - நாகசாகி, ஹிரோஷிமா) தாக்கிய தாக்குதலே இன்னும் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலின் சுவடுகள்கூட இன்னும் அழியவில்லை. ஆனால் இப்பொழுது பல நாடுகளும் தடிப்பயல்கள் போல் பெரிய பெரிய அணுக்குண்டுகளை அல்லவா குவித்து வைத்திருக்கிறார்கள்.
ரஷ்யாவில் தயாரித்து வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த அணுக்குண்டை வெடித்தால் அதன் அதிர்வு பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வருமுன்பு மூன்றுமுறை பூமியைச் சுற்றி வந்துவிடுமாம். ‘இதென்ன பிரமாதம் இதைவிட சக்தி வாய்ந்த அணுக்குண்டை எல்லாம் நாங்களும் வைத்திருக்கிறோம்ல. அதைப் போட்டால் இன்னும் அதிரும்ல’ என்று மனதுக்குள் சில நாடுகள் இறுமாப்புக் கொள்கின்றன.
அப்படி மூன்றாம் உலகப்பேர் வந்து இந்த சக்திமிகுந்த அழிவு சக்திகள் பயன் படுத்தப்படுமேயானால் என்னவாகும். பூமி துளைத்தெடுத்தக்கப்பட்டு சல்லடையாகி, எல்லாம் கரிக்காடாக அல்லவா காட்சியளிக்கும். அதன்பின்பு யார் யாரை ஆளப்போகிறார்கள்?. எந்த உலகத்தை ஆளப்போகிறார்கள்?.
குவிந்து கிடக்கும் சடலங்களுக்குத் தலைவனாக, சுடுகாடு எனும் சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாக, மனித எலும்புகளை சிம்மாசனமாக்கி, அட்டினக்கால் தோரணை போட்டு இந்த உலகத்தை ஆளப்போகும் அந்த மாமனிதன் யார்?.
அப்படியே இது சரித்திரமானாலும் அதை எழுதுவதற்கோ அல்லது படிப்பதற்கோ மனித உயிர் எதுவும் மிஞ்சியிருக்குமா?
இப்பொழுது சொல்லுங்கள். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா?
கனிஷ்கா, தென்காசி .
1 comment:
little boy & fat man
Post a Comment