. தென்னாபிரிக்காவுக்கு IPL சென்ற கதை




இந்தியன் பிரிமியர் லீக் (IPL) இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் ஏப்ரல் 18 இல் போட்டிகள் தொடங்குகின்றது. IPL சார்பில் 2 ஆவது கட்ட “Twenty20′ ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க போட்டிகள் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.



IPL நடந்து வந்த பாதை

மார்ச் 2: லோக்சபா தேர்தல் அறிவிப்பு.

மார்ச் 3: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

மார்ச் 4: தேர்தல் நடப்பதால் IPL தொடருக்குத் துணை இராணுவப்படையினர் பாதுகாப்புக் கொடுப்பது கடினம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு.
மார்ச் 5: IPL நிர்வாகம் திகதிகளை மாற்ற முடிவு.

மார்ச் 6: IPL தொடர் திட்டமிட்டபடி நடக்கும். தொடக்கவிழா ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்படுமென அதன் தலைவர் லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 7: மத்திய அரசிடம் புதிய அட்டவணை கொடுக்கப்பட்டது.

மார்ச் 9: பாதுகாப்பு அறிக்கை தருமாறு மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டது.

மார்ச் 10: பாதுகாப்புக்கு IPL. பொறுப்பேற்கும் என லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 12: மாநில அரசுகள், மத்திய பாதுகாப்பு வேண்டும் என நிர்ப்பந்தம்.

மார்ச் 13: சென்னை தவிர பிற இடங்களில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, மீண்டும் புதிய அட்டவணை வேண்டுமென மத்திய அரசு கேட்டது.

மார்ச் 14: மீண்டும் புதிய அட்டவணை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ச் 15: மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்கும்படி மத்திய அரசு, IPL. இடம் தெரிவித்தது.

மார்ச் 16: பி.சி.சி. ஐ. உள்துறை அமைச்சக அதிகாரிகள் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

மார்ச் 17: புதிய திகதிகளுக்கு இமாசல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் அனுமதியளித்தது. ஆனால், மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தது.

மார்ச் 18: மாகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, குஜராத் என மேலும் 4 மாநிலங்கள் புதிய திகதிகளுக்கு ஒப்புதல் அளித்தன.

மார்ச் 19: வீரர்கள் பாதுகாப்பிற்கு 16 குண்டு துளைக்காத பஸ்களும், 64 கவச வாகனங்களும் வாங்க ஐ.பி.எல். சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

மார்ச் 20: மும்பை டி.ஜி.பி.பாதுகாப்புக் குறித்து புதிய சர்ச்சை கிளப்பினார்.

மார்ச் 21: எந்த விதமான துணை இராணுவப்படை உதவியும் வழங்க முடியாதென உள்துறை அமைச்சர் கைவிரித்தார்.

மார்ச் 22: தொடரை இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவுக்கு மாற்ற இருப்பதாக மோடி அறிவித்தார்.

மார்ச் 23: இங்கிலாந்தில் நடத்தினால் அதிக செலவு ஏற்படும். அடுத்து நடக்கும் “Twenty20′ உலகக் கிண்ண வசூல் குறையுமென ஐ.சி.சி. பயப்பட்டது.

மார்ச் 24: IPL தொடர் தென்னாபிரிக்காவில் நடக்குமென முறைப்படி லலித் மோடி அறிவித்தார்.

உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு?

கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.

இரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்

நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!

இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

கவிக்கோ அப்துல் ரகுமான்

நினைவு படுத்தி பார்க்கிறேன் - யாழ்ப்பாணப் பொது நூலகம்


யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.