இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா!

லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா!

தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது.

ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம் அவனது ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதுவே பெரியவர்களுக்கு எழுச்சியைத் தூண்ட உதவுகிறது.

ஆலிவர் போன்ற அரிய வியாதிக்காரர்களுக்கு இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த நாளங்கள் அடைபடாமல் காக்க உதவுகிறது.

இதுகுறித்து ஆலிவரின் தாயாரும், நர்சுமான சாரா கூறுகையில், வயாகரா மிகவும் விலை உயர்ந்த மருந்து. ஆனால் நுரையீரல் ரத்த அழுத்த நோய்க்கு இது மிகவும் குறைந்த விலை மருந்தாகும் என்கிறார்.

பல்மனரி ஹைப்பர்டென்ஷன் எனப்படும் இந்த நுரையீரல் ரத்த அழுத்தத்தால், நுரையீரலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகிறது. இதனால் இதயம் பாதிக்கப்படும். ரத்தத்தில் ஆக்சின் அளவு குறைகிறது. இதனால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு ஆகியவை ஏற்படும்.

கடும் சளி, மூச்சு விடுவதில் பிரச்சினை, மூக்கிலிருந்து ரத்தம் வருவது, சோர்வு, இதய வலி ஆகியவையே இந்த நோயின் அடையாளங்கள்.

இந்த நோய் தீவிரமடையும்போது இதயம் பழுதடையும் ஆபத்து உள்ளது.

இந்த நோய் வந்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவர்களால் உயிர் வாழ முடியும். எவ்வளவுதான் மருந்து சாப்பிட்டாலும் அந்த காலகட்டம் வரைதான் வாழ முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

ஆலிவர் தற்போது ஒரு சில்டெனாபில் (வயாகரா) மாத்திரையை நான்காக பிரித்து நான்கு வேளைக்கு சாப்பிடுகிறான்.

அவனது நிலைமை மோசமாகும்போது மருந்தின் அளவை டாக்டர்கள் கூட்டியாக வேண்டும். ஆனால் இது எத்தனை காலத்திற்குக் கை கொடுக்கும் என்பதை டாக்டர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஆலிவர் வளர, வளர மிகவும் விலை உயர்ந்த மருந்துகளை அவன் நாட வேண்டி வரும். அப்போதுதான் உயிரைப் பிடித்து நிறுத்த முயற்சிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

No comments: