மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது

`கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்'
`மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்கையாளர்களென இணையத்தளமொன்று நேற்று குறிப்பிட்டிருக்கிறது.

ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் சம்பந்தப்பட்ட விக்ரர் போட்டை பல வருடங்களாக சர்வதேச புலனாய்வுத் துறையினர் தேடிவந்தனர். தாய்லாந்து புலனாய்வு பிரிவினரும் பல மாதங்களாக தேடி வந்தபோதும் இறுதியில் நேற்று முன்தினம் 41 வயதான விக்ரர் போட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கொலம்பியாவிலுள்ள இடதுசாரி பார்க் போராளிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகளை கொள்வனவு செய்ய அவர் முயற்சித்ததாக இந்தத் தடவை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக ஆறு நாடுகள் வரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடும்.

ஐ.நா.வின் ஆயுதத் தடைகளை மீறி அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்ரர் போல் அமைப்பால் அவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க ஔடத அமுலாக்கல் நிர்வாகத்திடமிருந்து பெற்ற தகவலையடுத்து தாய்லாந்து நீதிமன்றம் விடுத்திருந்த பிடியாணையின் பிரகாரம் விக்ரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

்மற்றொரு நாட்டிற்கு அநேகமாக அமெரிக்காவுக்கு அவரை நாடுகடத்துவதற்கு முன்பாக அவருக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகின்றோம்ீ என்று தாய்லாந்து குற்ற ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த தளபதி மேஜர் ஜெனரல் பொங்பாட் சாயாபான் தெரிவித்திருக்கிறார்.

"அவரை பல மாதங்களாக தேடி வந்தோம். தாய்லாந்துக்கு அவர் இன்று தான் திரும்பி வந்தார் என்றும் பொங்பாட் சாயாபான் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் முடிவின் பின்னரான கதையே விக்ரர் போட்டின் கதையாகும். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்ட பின் தோற்றம் பெற்ற மூன்று விடயங்களினால் அனுகூலம் பெற்றவர் இந்த விக்ரர் போட். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டபோது இவருக்கு வயது 25. அச்சமயம் சோவியத் விமானப் படையின் விமானங்கள், பெருந்தொகை ஆயுதங்கள், உதிரிப்பாகங்கள் என்பன மலிவாக கிடைத்தன. மிகக் குறைந்த விலையில் படையிலிருந்து விலகியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களிடமிருந்து அவற்றை உலகில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அவர் விற்பனை செய்யத் தொடங்கினார்.

எந்தவொரு அரசாங்கமோ போராளிக் குழுக்களோ ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் விக்ரர் தனது அன்ரனோவ் சரக்கு விமானங்களில் ஆயுதங்களை நிரப்பிக் கொண்டு பறந்து செல்வார். திரும்பிவரும் போது வைரக்கற்கள் உட்பட பெறுமதியானவற்றுடன் திரும்பிச் செல்வார்.

அங்கோலா அரசாங்கமோ அல்லது யுனிற்ரா போராளிகளோ அல்லது ஆப்கனிலுள்ள வடக்கு கூட்டணியோ அல்லது அவர்களின் எதிரிகளான தலிபன்களோ யாராக இருந்தாலும் பணம் செலுத்தினால் அவர்களுக்கு மலிவான போக்குவரத்துக் கட்டணங்களுடன் ஆயுதங்களை வழங்கி வந்தார். 2001 இற்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கத்திற்காகவும் அதன் சிவில் விநியோகஸ்தர்களுக்காகவும் அவர்களின் சார்பில் ஈராக்கிற்கு கப்பலில் பொருட்களை ஏற்றிச் சென்று வழங்கினார்.

அமெரிக்காவுக்கு எவர் எதிரிகள் எவர் ஆதரவாளர் என்று உலகை அமெரிக்க ஜனாதிபதி பிரித்த போது விக்ரர் இரண்டு பக்கம் சார்ந்தவராக இருக்கிறார் என்று `மேர்ச்சன்ற் ஒவ் டெத்' `மரணத்தின் வியாபாரி' என்ற நூலின் கர்த்தாக்களான டக்ளஸ் பாரா, ஸ்ரீபன் பிரவுன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஐ.நா.வுக்கான சமாதானப் பணியாளர்களுடன் சோமாலியாவுக்கு அவர் சென்றிருக்கிறார். 2004 இல் கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்ட பின் இலங்கைக்கு உதவி வழங்குவதற்காகவும் வந்துள்ளார். அத்துடன் லைபீரியாவின் பெரும்படைத் தளபதி ஒருவருக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரர் போட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு முழுமையான வியாபாரியாகும். எந்தவொரு கொள்கையும் இல்லாமல் சர்வதேச ரீதியாக போக்குவரத்தை நடத்துபவர். உதவி வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுத்தவரை அனர்த்தங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு நிவாரணங்களை விநியோகிப்பதற்கு சிறந்த முறையில் உதவுபவராக கணிக்கப்படுகின்றார். ஆனால் பிரிட்டனின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெய்னைப் பொறுத்தவரை விக்ரர் ஒரு `மரண வியாபாரி' யாகும். ஆபிரிக்காவில் உள்நாட்டு யுத்தங்களை ஊக்குவிப்பவரென 2000 ஆம் ஆண்டு இவரைப் பற்றி பீற்றர் ஹெய்ன் சாடியிருந்தார்.

கற்பனைக் கதாபாத்திரங்கள் போன்றதே விக்ரரின் பாத்திரமுமாகும். அவர் தஜிகிஸ்தானில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் கஸ்பியன் கடலுக்கு சமீபமாகவுள்ள துர்மெனிஸ்தானை சேர்ந்தவரென விக்ரர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் உக்ரெய்னை சேர்ந்தவரென ஏனையோர் கூறுகின்றனர். அவரிடம் பல கடவுச் சீட்டுக்கள் உள்ளன. அவற்றில் அவரின் பெயர் பல்வேறு விதமாக உள்ளது. அவர் திருமணம் செய்திருப்பதுடன் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மொழிகளுக்கான மொஸ்கோவின் இராணுவ நிலையத்தில் அவர் கற்றுள்ளார். உஸ்பெக் தொடக்கம் பிரெஞ்சு, போர்த்துக்கல், ஆபிரிக்க மொழிகள் உட்பட பல மொழிகளை அவர் பேசும் ஆற்றல் உள்ளவர். ஆனால் ரஷ்ய உளவுப் பிரிவான கே.கி.பி.யில் தான் ஒருபோதும் இருந்ததில்லையென்று அவர் கூறியுள்ளார்.

`யார் பணம் செலுத்தினாலும் அவர் பறந்து வருவார்' எனவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்ரரின் சேவையை அமெரிக்கா பயன்படுத்தினாலும் அவரை சி.ஐ.ஏ. இலக்கு வைத்திருக்கிறது. அமெரிக்க திறைசேரி இவரின் சொத்துக்களை முடக்கியிருந்தது. லைபீரியாவில் பல கம்பனிகள் அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொஸ்கோவில் வீடு இருந்தாலும் உலகம் பூராவும் தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். இறுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுவிட்டார்.

No comments: