கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள்


மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு

தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து

சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு

குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே

பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே
எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு

இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி

செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு

இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்

நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு

இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்

மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு

இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்

காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,
முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு.


கனக்கும் இதயத்தின் அனல் பறக்கும் வரிகள்
தெறிக்கும் உண்மையை செதுக்கும் கவிகள்...
படித்ததில் சிந்தனைகளை உரசிப்பார்த்த வரிகள்....

2 comments:

Anonymous said...

போகிற வயசிலயும் இது தேவையா கலைஞருக்கு???

தயா said...

அரசியல் சுகம் கண்டவர் அவர்... அவரை மயக்காது இந்த வார்த்தைகள்