அமெரிக்க அரசாங்கத்தால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. `தி பின்லேடன்ஸ்' என்ற அந்த புத்தகத்தை புலிட்சர் விருது பெற்ற ஸ்டீவ் கோல் எழுதி உள்ளார். இதில் பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவலை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சவூதி அரேபியாவில் மிகப்பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பின்லேடன், தனது சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருடன் வசித்தார். சிறு வயதில் அவர் மத படிப்புகளில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், அதாவது 1967-ல் அவரது 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை ஒரு விமான விபத்தில் பலியானார். அப்போதுதான் பல பெரியவர்கள் அவருக்கு தீவிரவாத கோட்பாடுகளை போதனை செய்தனர்.
மூத்த சகோதரர்
பின்லேடனின் மூத்த சகோதரர் சலீம். இவர் பின்லேடனைப் போல இல்லாமல், தன்னை முழுமையாக வர்த்தகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பேச்சுத் திறமை, சவூதி அரேபிய அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பை பெற்றுத் தந்தது. அதன்மூலம் நிறைய காண்டிராக்டுகள் வந்தன. இந்த நேரத்தில் குவைத் மீது சதாம் உசேன் படை எடுத்ததால், அதை முறியடிக்க சவூதி மண்ணில் அமெரிக்க படைகள் அனுமதிக்கப்பட்டன. இதனாலும், ஓமனில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பின்லேடன் ஆதரவு தெரிவித்ததாலும், அவருக்கும், சவூதி அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் அவர் சூடானில் குடிபுகுந்தார். இந்த நேரத்தில் அவரது மூத்த மகன், அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட தனிமை, பின்லேடனின் தீவிரவாத கொள்கைகளுக்கு மேலும் உரமேற்றி விட்டது. எனினும் மூத்த சகோதரரான சலீம், குடும்பம் சிதறி விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரை மீறி பின்லேடனால் எதுவும் செய்ய முடியவில்லை.
திடீர் மரணம்
ஆனால் 1988-ல் எதிர்பாராத விதமாக சலீம் விமான விபத்தில் பலியானார். அவரது மரணம்தான், பின்லேடனை தீவிரவாத பாதையில் முழு தீவிரத்துடன் இறங்க வழி வகுத்துள்ளது. சலீம் மட்டும் உயிருடன் இருந்து இருந்தால், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவமே நடைபெற்று இருக்காது என்று சலீமின் பல நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு எழுத்தாளர் ஸ்டீவ் கோல் அந்த புத்தகத்தில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment