மக்கள் தலைவர் காஸ்ட்ரோ.
ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ.
சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர்.
காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்.
இதன் விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப் போற்றப்பட்டார். கியூபாவின் அதிபராக ஆனபின்னும் எளிமையான மக்கள் தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார். இன்னமும் திகழ்கிறார்.
இவருடைய வழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் விழிப்புணர்வைப் பெற்றனர். அதன் விளைவாக இந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர்.
கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
தென்ஆப்பிரிக்க நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனாலும் மறுமுறை அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை. தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்த அவரை இன்னமும் தென்னாப்பிரிக்க மக்கள் தங்களின் பாசத்திற்குரிய தேசத் தந்தையாகப் போற்றுகிறார்கள்.
பிடல் காஸ்ட்ரோவின் இந்தப் பதவி துறப்பு உலக நாடுகளில் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என நம்புகிறோம். எத்தனை வயதானாலும் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார்.
http://thatstamil.oneindia.in/art-culture/...del-castro.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment